மத்திய அரசின் யோசனையால் அவசர சட்டம்?
Views - 51 Likes - 0 Liked
-
மத்திய அரசின் யோசனையால் தமிழக அரசு ஜல்லிக்கட்டு அவசர சட்டம் இயற்றுவதாகக் கூறப்படுகிறது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் வகையில் கடந்த 2016-ல் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஓர் அறிவிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற பீட்டாவால் மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக் கப்பட்ட நிலையில் மத்திய அரசு ஜல்லிக்கட்டு மீது அவசர சட்டம் கொண்டு வர முடியாது எனக் கருதியது. இதனால் அதை, தமிழக அரசு மூலமாக செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்காகவே, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத் தின் டெல்லி சந்திப்பு நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இதற்கு தமிழகத்தில் 4 தினங்களுக்கு முன்பு தொடங்கிய திடீர் அறப்போராட்டம் ஒரு முக்கியக் காரணம் ஆகும்.
இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் கூறுகையில், ‘தீர்ப்பு ஒத்திவைக் கப்பட்ட நிலையில் ஜல்லிக்கட்டு மீது கொண்டுவரப்படும் அவசரச்சட்டம், உச்ச நீதிமன்றத்துடன் மோதலை ஏற்படுத்திவிடும். எனவே, ஜல்லிக் கட்டு மீதான தீர்ப்பை உச்ச நீதி மன்றம் வெளியிட்ட பின் எதையும் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு காத்திருந்தது. இதற்குள் தமிழகத்தில் தொடங்கிய போராட் டம் இரு அரசுகளையும் அப் பணியை முடுக்கிவிட வைத்தது. இதில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஈடுபட்டிருப்பதால் அதன் அரசியல் லாபம் யாருக் கும் கிடைக்காத சூழல் உருவாகி விட்டது.’ எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நேற்று முன் தினம் மாலை, தமிழக அரசால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அவசரச்சட்டத்தின் முன்வடிவு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், ஆலோசனை செய்து சில முக்கிய திருத்தங்கள் செய்ய வேண்டி வந்தது. பிரதமரைச் சந்திக்க வந்த முதல்வர் பன்னீர்செல்வம், திருத்தம் செய்ய டெல்லியிலேயே ஒருநாள் தங்க வைக்கப்பட்டார். இவருடன், உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் நள்ளிரவு 12.30 மணி வரை ஆலோசனை செய்தனர்.
இறுதி வடிவம் கொடுக்கப்பட்ட சட்ட முன்வடிவு நேற்று மதியம் சட்டம், கலாச்சாரம், சுற்றுச்சூழல் ஆகிய மூன்று மத்திய அமைச்சகங் களுக்கு கருத்து கேட்க அனுப்பப் பட்டது. இதில் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்களான ரவிசங்கர் பிரசாத் மற்றும் அணில் மாதவ் தாவே ஆகிய இருவரும் வெளியூர் பயணங்களை ரத்து செய்தனர். மூன்று அமைச்சகங் களும் தங்கள் கருத்துகளை நேற்று மாலையே அனுப்பிவிட்டன. பிறகு அந்த முன்வடிவு அட்டர்னி ஜெனரலான முகுல் ரோஹத்கி யிடமும் அனுப்பப்பட்டு நேற்றே கருத்து பெறப்பட்டுவிட்டது. இது உள்துறை அமைச்சகம் மூலமாக குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அநேகமாக குடியரசு தலைவர் சனிக்கிழமை ஒப்புதல் அளித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து மீண்டும் உள்துறை அமைச்சகம் மூலமாக தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு அதன் ஆளுநரிடம் ஒப்படைக்கப்படும்.
இதுபோல் மாநில அரசின் அவசர சட்டங்களை அதன் ஆளுநரே பிறப்பிக்கலாம். ஆனால், அவை பொதுப்பட்டியலில் இடம் பெறாதவையாக இருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு பொதுப் பட்டியலில் (concurrent list) இடம் பெற்றுள்ளதால் அதை மாநில அரசு திருத்த மத்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். இவ் வாறு பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள சட்டங்களை மத்திய அல்லது மாநிலம் என இருஅரசு களும் திருத்தம் செய்யலாம்.
எனவே, பொதுப்பட்டியல் எண் 3-ல் 17-வது இடத்தில் உள்ள ஜல்லிக்கட்டில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. இந்த திருத்தம் தமிழகத்தில் மட்டுமே செல்லும். இதை சரிபார்க்க அமலாக்க முகவராக (நோடல் ஏஜன்சி) மத்திய உள்துறை அமைச்சகம் இருப்பதால், அவசர சட்ட முன்வடிவை அதனிடம் அனுப்பி ஒப்புதல் பெறுவது அவசியமாகிறது. இந்த ஒப்புதலுக்கு பின் தமிழக அரசு அந்த அவசரசட்டத்தை நாளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News