வருகிற 26–ந்தேதி குடியரசு தின விழா: குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்
Views - 38 Likes - 0 Liked
-
நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26–ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தேசியகொடி ஏற்றி வைக்கிறார். அவருக்கு போலீசார் அணி வகுப்பு மரியாதை செலுத்துவார்கள்.
விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. மேலும் பள்ளி மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் மாணவ–மாணவிகள் அவர்களது பள்ளிகளில் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். போலீஸ் அணி வகுப்பில் பங்கேற்கும் போலீசாரும் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நாள்தோறும் ஒத்திகை மேற்கொண்டு வருகிறார்கள்.
பாதுகாப்பு பணி
குடியரசு தின விழா நடைபெறவுள்ள அண்ணா விளையாட்டு அரங்கை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அங்கு மைதானத்தை சுத்தப்படுத்தி, ஒழுங்குபடுத்தும் பணிகள் நடைபெறுகிறது. குடியரசு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
விழா நடைபெறும் மைதானம், கன்னியாகுமரி மற்றும் மக்கள் கூடும் பகுதிகளான ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடவுள்ளனர். மேலும் குமரி மாவட்ட சோதனை சாவடிகளிலும் பலத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். கடலோர கிராமங்களிலும், கடல் பகுதிகளிலும் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொள்ளவுள்ளனர்.News