நாடு முழுவதும் பயிர் கடனுக்கான வட்டி ரூ.665 கோடி ரத்து பிரதமர் தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் முடிவு
Views - 48 Likes - 0 Liked
-
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, பண நெருக்கடி காரணமாக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்கடனுக்கான வட்டியை செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. எனவே இந்த வட்டியை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
ரூ.665 கோடி வட்டி ரத்து
இந்த நிலையில் நேற்று நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனுக்கான 2016-ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத வட்டியை ரத்து செய்வது என முடிவெடுக்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி முடிய குறுகிய கால பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகள் பெரிதும் பயன் அடைவார்கள். இந்த 2 மாதங்களுக்கு மட்டும் ரூ.665 கோடி வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.
இதற்காக கூட்டுறவு வங்கிகள் விவசாய கடன்களை வழங்க நபார்டு வங்கி கூடுதலாக ரூ.400 கோடியை ஒதுக்கும். இதனால் மத்திய அரசுக்கு மொத்தம் ரூ.1,065 கோடி கூடுதலாக நிதி தேவைப்படும்.
தற்போது, குறுகிய கால பயிர்க்கடனாக 7 சதவீத வட்டியுடன் ரூ.3 லட்சம் வரை பொதுத்துறை, பிராந்திய கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிட்ட காலத்துக்குள் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டி ஊக்கத் தொகை அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.
வேலைவாய்ப்பு பெருகும்
நேற்றைய மந்திரி சபை கூட்டத்தில், கிராமப்புறங்களில் வீடுகள் கட்டும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கூடுதல் வட்டி மானியத்துடன் வீட்டுக் கடன் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி புதிய வீடுகளை கட்டிக் கொள்ளவும், தங்களுடைய பழைய வீடுகளை புதுப்பித்துக் கட்டவும், ரூ.2 லட்சம் ரூபாய் வரை வட்டி மானியத்துடன் கடன் வழங்கப்படும். வீடு கட்டுவதற்கு, 3 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படுவதால் கடன் வாங்கியவர்கள் செலுத்தும் மாதாந்திர தொகையும் குறையும்.
இந்த திட்டத்தை தேசிய வீட்டு வசதி வங்கி நடைமுறைப்படுத்தும். பிரதம மந்திரி அவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் வராத ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் இந்த வட்டி மானியத் திட்டம் பொருந்தும். இதனால் கிராமங்களில் வீடுகள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், வேலைவாய்ப்பும் பெருகும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
தற்போது, ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களில் நிர்வாக மேலாண்மை மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான பட்டயச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கல்வி நிறுவனங்களின் தேசிய முக்கியத்துவம் கருதி இனி பட்டயச் சான்றிதழ்களுக்கு பதிலாக பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்குவதற்கு மத்திய மந்திரிசபை நேற்று தனது ஒப்புதலை அளித்தது. இது தொடர்பான மசோதா விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னாட்சி அதிகாரம்
இதுபற்றி மோடி தனது டுவிட்டர் பதிவில், “இந்த மசோதா, ஐ.ஐ.எம். நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரம், சிறந்த நிர்வாகம், முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு உள்பட பல்வேறு துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்க ஒன்று என மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டர் பதிவில் பாராட்டி உள்ளார்.
முதியோர் ஓய்வூதியம்
60 மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியோரின் எதிர்கால நலன் கருதி 10 ஆண்டுகளுக்கு ஓய்வூதியம் அளிக்கும் ‘வரிஷ்தா பென்ஷன் பீமா யோஜ்னா’ திட்டத்துக்கும் மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
எல்.ஐ.சி. மூலம் செயல்படுத்தப்படவிருக்கும் இத்திட்டத்தில் மாத, 3 மாத, 6 மாத, ஆண்டு அடிப்படையில் ஓய்வூதியம் பெற முடியும். முதிர்வுத் தொகை 8 சதவீத வட்டியுடன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வர்த்தகத்தை மேம்படுத்தும் விதமாக டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தை உலகத் தரம்வாய்ந்த கண்காட்சி மையமாக மாற்றுவதற்கு ரூ.2,254 கோடி ஒதுக்கவும், இந்த மைதானத்துக்கு ‘மினி ரத்னா’ அந்தஸ்து வழங்கவும் மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
கியோட்டோ தீர்மானத்துக்கு ஒப்புதல்
பூமியை வெப்பம் அடையச் செய்கிற பசுமைக் குடில் வாயுக்களை கட்டுப்படுத்துவதற்காக ஜப்பானின் கியாட்டோ நகரில் 2012-ம் இயற்றப்பட்ட 2-ம் கட்ட தீர்மானத்தை நிறைவேற்றும் காலத்துக்கான (2013-2020) ஒப்புதலையும் மந்திரி சபை நேற்று வழங்கியது.
இந்த 2-வது தீர்மானத்தை இதுவரை 65 நாடுகள் ஏற்றுக்கொண்டு உள்ளன.News