‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் திட்டம் தொடங்கப்படும் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் தகவல்
Views - 60 Likes - 0 Liked
-
குடியரசு தின விழாவையொட்டி ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் எள்ளுவிளை ஊராட்சியில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
கிராமசபை கூட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், 2017–18–ம் நிதியாண்டில் பொதுநிதியிலிருந்து மேற்கொள்ளப்படவிருக்கும் ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்கான திட்ட அறிக்கை குறித்தும், வரவு– செலவு கணக்குகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
கலெக்டர்
பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறியதாவது:–
மக்களின் பங்கேற்புடன் ஒளிவு மறைவற்ற முறையில் கிராம நிர்வாகம் நடைபெறவேண்டும் என்பதற்காக கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊராட்சியில் மேற்கொண்ட வரவு, செலவு கணக்குகள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த நிதியாண்டில் இந்த ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டப்பணிகள், சுகாதாரப்பணிகள், குடிநீர் மற்றும் சாலைப்பணிகள் பொதுமக்களுக்கு ஊராட்சி அதிகாரிகள் மூலம் எடுத்துக் கூறப்படுகிறது.
94 சதவீதம் ஆதார் பதிவு
குமரி மாவட்டத்தில் ஆதார் எண் பதிவு செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். தற்போது 94 சதவீதம் குடும்ப அட்டைத்தாரர்கள் ஆதார் எண் பதிவு செய்துள்ளார்கள். மீதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் அரசு வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திலிருந்து ‘ஸ்மாட் கார்டு‘ வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளது.
மேலும் கடந்த ஆண்டை விட 40 சதவீதம் மழை குறைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.
கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமலினி, கோட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட வழங்கல் அதிகாரி சின்னம்மாள், ஊராட்சிகள் உதவி இயக்குனர் விநாயக சுப்பிரமணியன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அருளரசு, வட்ட வழங்கல் அதிகாரி கோலப்பன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.News