" Slow and steady wins the race"

கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு உடனடியாக சட்டசபையை கூட்ட வலியுறுத்தல்

Views - 50     Likes - 0     Liked


 • தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக தற்போது காபந்து முதல்-அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
   
  அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
   
  இதனால் இரு தரப்பினரும் தங்களுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டசபை அ.தி.மு.க கட்சி தலைவராக (முதல்-அமைச்சர்) சசிகலா தேர்ந்து எடுக்கப்பட்ட போதிலும், முதல்- அமைச்சராக பதவி ஏற்க அவருக்கு கவர்னர் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை.
   
  சசிகலா ஆதரவாளர்கள் பெரும்பாலான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ரகசிய இடத்தில் தங்க வைத்து உள்ளனர். அவர்கள் சிறை வைக்கப்பட்டு இருப்பதாக புகார் கூறப்படுகிறது.
   
  கவர்னருடன் சந்திப்பு
   
  இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக கவர்னர் பதவியை கூடுதல் பொறுப்பாக கவனிக்கும் மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்றுமுன்தினம் சென்னை வந்தார். அவரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து தான் கொடுத்த ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக கூறியதோடு, சில கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்தார்.
   
  இதேபோல் சசிகலாவும் கவர்னரை சந்தித்து, தனக்கு பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி, சட்டசபை அ.தி. மு.க. கட்சியின் தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான ஆவணச்சான்றுகளை வழங்கினார்.
   
  ஆட்சி அமைக்க யாருக்கு அழைப்பு?
   
  ஆனால் கவர்னர் எந்த முடிவையும் தெரிவிக்காமல், தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.
   
  ஆட்சி அமைக்க யாரை அழைப்பது? என்பது குறித்து கவர்னர் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவரது முடிவை அனைத்து தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.
   
  மு.க.ஸ்டாலின்
   
  இந்த நிலையில், தி.மு.க. செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 7 மணி அளவில் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.
   
  சந்திப்பு முடிந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
   
  தமிழகத்தில் தேர்தல் நடந்த போது எந்த பணியும் நடக்கவில்லை. அதைத்தொடர்ந்து ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த 75 நாட்களும் எந்த பணியும் நடக்கவில்லை. முதல்-அமைச்சரின் இலாகாக்களின் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றிருந்தபோதும் எந்த பணியும் நடைபெறவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பிறகு தற்போது கடந்த 10 நாட்களாக தமிழகமே ஸ்தம்பித்துப் போய்விட்டது.
   
  9 மாதங்கள் ஸ்தம்பிப்பு
   
  ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள், இளைஞர்கள், தமிழக மக்கள் இணைந்து நடத்திய போராட்டம், யார் முதல்- அமைச்சர் என்பதில் அ.தி. மு.க. கட்சிக்குள் நடக்கும் மல்லுக்கட்டு போராட்டம், என கடந்த 9 மாதங்களாக அரசுப் பணிகள் நடக்காமல் ஸ்தம்பித்துவிட்டது.
   
  இதையெல்லாம் கவர்னரிடம் சுட்டிக் காட்டினோம். அரசியல் சாசனத்தின் அடிப்படையில் கவர்னர் சட்டரீதியான நடவடிக்கை எடுத்து ஒரு நல்ல நிலையை தமிழகத்தில் உருவாக்கித் தர வேண்டும் என்று கோரி உள்ளோம்.
   
  சட்டசபையை கூட்ட வேண்டும்
   
  உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி தமிழக தேர்தல் ஆணையத்திடம் சுட்டிக் காட்டினார். அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல், அரசு எந்த ஒத்துழைப்பையும் எங்களுக்கு தரவில்லை என்று கூறி உள்ளார். ஒத்துழைப்பு கொடுத்தால்தான் கோர்ட்டு சொல்லும் வகையில் விதி முறைகளை நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.
   
  உள்ளாட்சி தேர்தலைக் கூட நடத்துவதற்கு இந்த அரசு முன்வராத நிலையில் இருக்கிறது. இதையும் கவர்னரிடம் சுட்டிக் காட்டினோம். அரசியல் சாசனத்தின்படி உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும், சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, வெளிப்படையான வகையில் அவர்கள் வாக்களிக்கக் கூடிய நிலையை உருவாக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.
   
  இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
   
  அதன் பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-
   
  சசிகலா குற்றச்சாட்டு
   
  நிருபர் கேள்வி:- முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கையின் பின்னணியில் தி.மு.க. இருக்கிறது என்று சசிகலா குற்றம்சாட்டி இருக்கிறாரே?
   
  மு.க.ஸ்டாலின் பதில்:- சசிகலா சொல்லக்கூடிய அந்த குற்றச்சாட்டுக்கு எல்லாம் பதில் சொல்லி எனது நேரத்தையும் தரத்தையும் குறைத்துக் கொள்வதற்கு நான் என்றைக்கும் தயாராக இல்லை.
   
  கேள்வி:- கவர்னர் மாளிகை தாமதமாக செயல்படுவது பற்றி கூறினீர்களா?
   
  பதில்:- உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம்.
   
  கேள்வி:- யாரும் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்காவிட்டால் கவர்னர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று கேட்டீர்களா?
   
  பதில்:- இதையெல்லாம் சேர்த்துத்தான் பொதுவான பதிலை கூறுகிறேன். அரசியல் சாசனத்தின்படி சட்ட ரீதியாக முறையான நடவடிக்கையை கவர்னர் எடுக்கவேண்டும் என்பதை சொல்லி இருக்கிறோம். எல்லாமே அதில் அடக்கம்.
   
  பிணைக்கைதிகள்
   
  கேள்வி:- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் இடம் குறித்து வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. புகாரும் தாக்கல் ஆகி உள்ளது. இதுபற்றியும் பேசினீர்களா?
   
  பதில்:- எம்.எல்.ஏ.க்கள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டு உள்ளனர். அதிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கூறி இருக்கிறோம்.
   
  கேள்வி:- அரசு அதிகாரிகள் ஒரு சார்பாக நடக்கின்றனர் என்பது பற்றி சமூக வலைத்தளங்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
   
  பதில்:- உண்மையில் என்ன நடக்கிறது என்பது பற்றி சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தினால் உங்களுக்கு நான் பல கோடி நன்றிகள் கூறுவேன்.
   
  இவ்வாறு அவர் கூறினார்.
   
  கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மு.க.ஸ்டாலின் மனு ஒன்றையும் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
   
  அரசியல் சாசன வெற்றிடம்
   
  பல்வேறு தொடர் நிகழ்வுகளால், தமிழகத்தில் அரசியல் மற்றும் அரசியல் சாசன ஸ்தம்பிப்பு நிலை ஏற்பட்டு இருப்பது உங்களுக்குத் தெரியும். ஆளும் கட்சியின் சுயநலனுக் காக அரசு எந்திரம் சீர்குலைந்து, மக்கள் நலன் கடந்த 9 மாதங்களாக பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
   
  மாநிலத்தில் தற்போது அரசியல் சாசன வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சிக்குள் நடக்கும் உள்கட்சிச் சண்டையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வற்புறுத்தலின் பேரில் ராஜினாமா கடிதம் பெறப்பட்டதாக முதல்- அமைச்சர் குற்றம் சாட்டும் நிலை அதிர்ச்சி அளிக்கிறது.
   
  விருப்பத்துக்கு மாறாக...
   
  எம்.எல்.ஏ.க்களும் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக வேறிடத்தில் வைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்துள்ளன, வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை சட்டம் வலியுறுத்துகிறது. எந்த வகையிலும் குதிரை பேரம் நடக்கவிடக் கூடாது. கட்சித் தாவல் தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
   
  மாற்று அரசு
   
  இதுபோன்ற சூழ்நிலை தொடர்ந்தால், தமிழகத்தில் நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்துவிடும். இதை அனுமதிக்கக் கூடாது. மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலும், மாநிலத்தின் வளர்ச்சி பாதிக் கப்பட்டு இருப்பதாலும், ஒரு மாற்று அரசை உருவாக்குவது தற்போதைய காலத்தின் கட்டாயமாக உள்ளது.
   
  எனவே அவசரமாக சட்டசபை கூட்டப்பட வேண்டும். சுதந்திரமாக பெரும்பான்மைக்கான தேர்வு நடத்தப்பட்டு, கால தாமதம் இல்லாமல் ஒரு திறமையான அரசை அமைக்க, எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   
  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

   

  News