தலைமை தேர்தல் கமிஷனரிடம் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் மனு
Views - 39 Likes - 0 Liked
-
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அதன்பிறகு கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட சிலருக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
டாக்டர் மைத்ரேயன் எம்.பி. தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க் கள் பி.ஆர்.சுந்தரம், அசோக்குமார், சத்தியபாமா, முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் உள்பட 12 பேர் டெல்லியில் நேற்று இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
42 பக்கங்களை கொண்ட அந்த மனுவில் கூறப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு:-
அ.தி.மு.க.வின் கட்சி விதிகளில் தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது. அதோடு, பொதுச் செயலாளரை கட்சி உறுப்பினர்கள் தான் ஓட்டுபோட்டு தேர்வு செய்ய வேண்டும். எனவே, சசிகலா பொதுச்செயலாளர் ஆனதை செல்லாது என்று அறிவிப்பதுடன், அவர் செய்த புதிய நியமனங்கள், நிர்வாகிகள் நீக்கம் போன்றவற்றையும் ரத்து செய்ய வேண்டும்.
துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக் கப்பட்டதையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி சசிகலா ஆதரவாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தலைமை தேர்தல் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர்களிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் எந்த பதிலும் கூறாமல் காரில் ஏறி சென்றுவிட்டனர்.News