" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது"

பிரதமரிடம் 41 பக்க கோரிக்கை மனு எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

Views - 46     Likes - 0     Liked


 • தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.39,565 கோடி வழங்க வேண்டும்; மாநில அரசின் ஒப்புதல் இன்றி நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரிடம் 106 பக்க கோரிக்கை மனுவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

  புதுடெல்லி,

  தமிழக பிரச்சினைகள், திட்டங்கள் குறித்து பிரதமரை சந்தித்து பேசுவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றார். அவருடன் அதிகாரிகள் குழுவினரும் சென்றனர்.

  பிரதமரிடம் கோரிக்கை மனு

  எடப்பாடி பழனிசாமி நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருப்பதற்காக மோடிக்கு அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். மேலும், தமிழக மக்களின் உணர்வுகளோடு கலந்துள்ள வீர விளையாட்டான ஜல்லிக் கட்டு போட்டியை நிரந்தரமாக நடத்த உரிய அனுமதிகளை வழங்கி உதவி செய்ததற்காகவும் நன்றி கூறினார்.

  இந்த சந்திப்பின் போது, தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய 41 பக்க மனு ஒன்றை பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

  அந்த மனுவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

  வறட்சி நிவாரணம்


  * வறட்சி நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு கோரியுள்ள 39 ஆயிரத்து 565 கோடி ரூபாய்; வர்தா புயல் நிவாரண பணிகளுக்காக 22 ஆயிரத்து 573 கோடி ரூபாய் ஆகியவற்றை துரிதமாக விடுவிக்க வேண்டும்;

  * பல்வேறு மத்திய அரசு திட்டங்களில் தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்கப்பட வேண்டிய 17 ஆயிரத்து 333 கோடி ரூபாய் நிதியை உடனே தரவேண்டும்.

  ‘நீட்’ தகுதித்தேர்வு

  * தமிழக மாணவர்களின் நலன் கருதி மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக சட்டமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுக்கான (நீட்) சட்ட முன் வடிவிற்கு மத்திய அரசின் ஒப்புதல் தரப்படவேண்டும்;

  * தஞ்சாவூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் நிறுவவேண்டும்.

  * அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்ற விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழக அரசு சமர்பித்துள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும்.

  * காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழு ஆகியவை விரைவில் அமைக்கப்பட வேண்டும்.

  ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம்


  * தமிழக அரசின் உள்கட்டமைப்பு நிதியத்திற்கு, தேசிய உள்கட்டமைப்பு முதலீட்டு நிதியை முதலீடு செய்வதற்கு, மத்திய நிதி அமைச்சகத்திற்கு, உரிய உத்தரவிடவேண்டும்.

  * காவிரி டெல்டா பகுதியில், நிலத்தில் இருந்து மீத்தேன் எடுக்கும் திட்டத்தால், விவசாயிகளின் நலன் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் அத்திட்டத்தை கைவிட ஏற்கனவே மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது.

  * தற்போது நெடுவாசலில், சம்பந்தப்பட்ட விவசாயிகளைக் கலந்து ஆலோசிக்காமலும், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலும், ஹைட்ரோ கார்பன் (இயற்கை எரிவாயு) திட்டப்பணிகளை மேற்கொள்ளக்கூடாது.

  மீனவர்கள் பிரச்சினை

  *தமிழகத்தின் நீர்த் தேவையை பூர்த்தி செய்ய, தீபகற்ப நதிகளான மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி, வைகை மற்றும் குண்டாறு நதிகளையும், பம்பா, அச்சன்கோவில், வைப்பாறு நதிகளையும் ஒன்றாக இணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  * மீனவர் பயனடையும் வகையில், மீன் வள பரவலாக் குதல் தொடர்பான சிறப்பு தொகுப்பு திட்டத்திற்காக 1,650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

  * தற்போது வரை இலங்கை சிறையில் 35 தமிழக மீனவர்களும், 120 மீன்பிடி படகுகளும் உள்ளன. அந்த மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை விரைவில் மீட்கவேண்டும்.

  * தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில், மீன்பிடிப்பில் ஈடுபடும்போது இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் உடனடியாக முற்றிலுமாக நிறுத்தப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  * பாக் நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

  இரட்டை குடியுரிமை

  * கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை நிலைநாட்டி, பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்டினால் மட்டுமே நமது மீனவர்கள் தொடர்ந்து சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இதில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  * இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாக வாழவும், இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் தகுந்த மாற்றங்கள் ஏற்படுத்த இலங்கை அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்து வேண்டும்.

  * தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

  தமிழகத்துக்கு மின்சாரம்

  * கூடங்குளம் அணு மின் உற்பத்தி நிலையத்தின், 3-வது மற்றும் 4-வது அலகுகளில் உற்பத்தி செய்யப்படும், 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் முழுவதையும், தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யவேண்டும்.

  * செய்யூரில் நிறுவப்படவுள்ள, மின் உற்பத்தி நிலையப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை விரைந்து கோர மத்திய எரிசக்தி துறைக்கு தக்க அறிவுரையை பிரதமர் வழங்கவேண்டும்.

  * தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை உரிய முறையில் அமல்படுத்துவதற்காக கூடுதலாக மாதந்தோறும் 85 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை சலுகை விலையில் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

  பாரத்நெட் திட்டம்

  * 14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளால் தமிழகத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பை ஈடுசெய்ய வேண்டும்.

  * கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரைவாக அமல்படுத்த ஏதுவாக கடலோர ஒழுங்குமுறை பகுதிக்கான அனுமதியை விரைவாக வழங்கவேண்டும்.

  * தமிழகத்தில், பாரத்நெட் திட்டதை தமிழக அரசு நிறுவனம் மூலம் செயல்படுத்த ஏதுவாக, தக்க அனுமதியை வழங்க, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு உரிய அறிவுரை வழங்கு வேண்டும்.

  மேற்கண்ட அம்சங்கள் மனுவில் இடம்பெற்று உள்ளன.

  எடப்பாடி பழனிசாமி பேட்டி

  பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பிரதமரிடம் தான் வைத்த கோரிக்கைகளை விளக்கினார்.

  பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

  கேள்வி: நீங்கள் அளித்த கோரிக்கைகளுக்கு பிரதமர் என்ன உத்தரவாதம் அளித்துள்ளார்?

  பதில்: நான் எடுத்து வைத்த கோரிக்கைகளை பிரதமர் மிகவும் கவனமாக கேட்டுக்கொண்டார்.

  தியாகம்

  கேள்வி: நெடுவாசல் திட்டம் பற்றி பா.ஜனதா தலைவர்கள் பேசும்போது, ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் மாநிலங்கள் தியாகம் செய்துதான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கு உங்கள் பதில் என்ன?

  பதில்: அதே பா.ஜனதாவின் மூத்த நிர்வாகியான எச்.ராஜா, விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டம் வந்தாலும் அதை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று கூறி உள்ளார்.

  கேள்வி: 3 மாதங்களுக்கு மேலாகியும் தமிழகத்துக்கு வறட்சி நிவாரணம் கிடைக்கவில்லையே? பிரதமரிடம் நீங்கள் அதற்கான காலக்கெடு ஏதும் நிர்ணயித்துள்ளர்களா?

  பதில்: கோரிக்கை மனுவில் விளக்கமாக கூறி இருக்கிறேன். பிரதமர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார்.

  இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். 

  News