ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 2 நாட்களில் 10,245 விண்ணப்பங்கள் விற்பனை
Views - 36 Likes - 0 Liked
-
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், அரசு வழிகாட்டுதல்களின்படி ஆசிரியர் தகுதி தேர்வு தாள்–1 மற்றும் தாள்–2 முறையே வருகிற ஏப்ரல் மாதம் 29 மற்றும் 30–ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் குமரி மாவட்டத்தில் 18 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் நேற்று முன்தினம் முதல் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 2–வது நாளாக விண்ணப்பங்கள் விற்பனை நடைபெற்றது. வருகிற 22–ந் தேதி வரை (ஞாயிற்றுகிழமை தவிர) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படுகிறது. தாள் –1 மற்றும் தாள் –2 ஆகிய இருதேர்வுகளை எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் தனித்தனியாக விண்ணப்பங்களை பெற்று சென்றனர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களும் நேற்றுமுன்தினம் முதல் பெறப்பட்டு வருகிறது. நாகர்கோவில் எஸ்.எல்.பி. மகளிர் உயர்நிலைப்பள்ளி, தக்கலை கல்வி மாவட்ட அலுவலகம், களியக்காவிளை அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வருகிற 23–ந் தேதி வரை(ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் திரும்ப பெறப்படும்.
கடந்த 2 நாட்களில், குமரி மாவட்டத்தில் 18 மையங்கள் மூலமாக முதல்தாள் தேர்வுக்கான விண்ணப்பங்கள் 1,405–ம், இரண்டாம் தாள் தேர்வுக்கான விண்ணப்பங்கள் 8,840–ம் ஆக மொத்தம் 10,245 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. அதேபோல் கடந்த 2 நாட்களில் பூர்த்தி செய்யப்பட்ட முதல்தாள் விண்ணப்பங்கள் 19–ம், இரண்டாம் தாள் விண்ணப்பங்கள் 315–ம் ஆக மொத்தம் 334 விண்ணப்பங்கள் 3 மையங்கள் மூலமாக திரும்ப பெறப்பட்டுள்ளன.News