நாகர்கோவிலில் வாடகை பாக்கி வைத்திருந்த கடையை பூட்டி ‘சீல்’ வைப்பு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
Views - 55 Likes - 0 Liked
-
நாகர்கோவில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை பாக்கி வைத்திருப்பவர்கள், குடிநீர் கட்டண பாக்கி, சொத்துவரி, தொழில்வரி பாக்கி வைத்திருப்பவர்கள் விரைவில் கட்ட வேண்டும் என்றும், அவ்வாறு கட்டாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
அந்த எச்சரிக்கையையும் மீறி வாடகை பாக்கி செலுத்தாதவர்களின் கடைகளை பூட்டி சீல் வைத்தும், சொத்து வரி பாக்கி வைத்திருப்பவர்கள் கட்டிடங்கள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள் முன்பு குப்பைத்தொட்டிகளை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
ரூ.46 ஆயிரம் பாக்கி
இந்தநிலையில் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி ரவுண்டானா அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்தில் லேத் பட்டறை வைத்திருக்கும் ஒருவர் கடந்த 2015–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.46,317 வாடகை பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தும் அந்த பாக்கியை அவர் செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் நகராட்சி வருவாய் அதிகாரி குமார்சிங், ஆய்வாளர்கள் சுப்பையன், இசக்கி சரவணன், முருகன் உள்ளிட்டோர் நேற்று மதியம் அந்த கடையை பூட்டி சீல் வைப்பதற்காக சென்றனர். அப்போது அந்தக்கடை பூட்டப்பட்டு இருந்தது.
சீல் வைப்பு
இதையடுத்து அதிகாரிகள் மேலும் ஒரு பூட்டு போட்டு அந்தக்கடையை பூட்டி, சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.
இதுபோன்ற நடவடிக்கைககள் தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
News