" “It always seems impossible until it is done.”-Nelson Mandela"

ரே‌ஷன் கடை போராட்டத்தை தொடர்ந்து குடிநீர் பிரச்சினைக்கும் போராட்டம் நடத்துவோம்; மு.க. ஸ்டாலின் பேட்டி

Views - 54     Likes - 0     Liked


  • ரே‌ஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படாததை கண்டித்து தி.மு.க. சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் சமூக நலக்கூடங்களிலும், தனியார் திருமண மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட சூரப்பட்டு, துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட மண்ணடி, ராயப்பேட்டை பகுதிக்கு உட்பட்ட லாயிட்ஸ் சாலை ஆகிய இடங்களில் சிறை வைக்கப்பட்டிருந்த தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

    இதனை தொடர்ந்து மண்ணடியில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

    5 லட்சம் பேர் கைது

    தி.மு.க.வினர் மட்டுமல்லாமல், பல்வேறு கட்சிகள், அந்தந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களுடைய உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக குறைந்தது 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தி.மு.க.வை சார்ந்தவர்களையும், பொதுமக்களையும் கைது செய்துள்ள, இந்த அரசின் ஆணவ போக்கிற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு சில இடங்களில் போலீஸ் வாகனம் இல்லை, போலீசார் இல்லை என்ற நிலையில் சிலரை கைது செய்யாமலும் விட்டிருக்கிறார்கள்.

    இது மக்களுடைய பிரச்சனைக்காக போராடுகிற அறப்போராட்டம். இந்த அறப்போராட்டத்தை அடக்கிட வேண்டும் என்பதற்காக போலீசார் அரசின் ஆணையை ஏற்றுக்கொண்டு கைது செய்திருக்கிறார்கள். இந்த போராட்டத்தின் நோக்கம் என்ன என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். ரே‌ஷன் கடைகளில் கடந்த 3 முதல் 4 மாதங்களாக பாமாயில் இல்லை, பருப்பு வகைகள் கிடையாது, போதுமான அளவுக்கு அரிசியும், சர்க்கரையும் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

    செயல்படமுடியாத ஆட்சி

    ஆக இதையெல்லாம் வலியுறுத்தக்கூடிய வகையில், சுட்டிக்காட்டக்கூடிய வகையில் இந்த போராட்டத்தை தி.மு.க. முன்னின்று நடத்தியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த ஆட்சியை பொறுத்தவரை, குற்றவாளி தலைமையில் நடக்கும் ஒரு பினாமி ஆட்சியாக இருக்கிறது. ரே‌ஷன் கடையிலிருந்து தலைமைச்செயலகம் வரையில் செயல்பட முடியாத ஒரு ஆட்சி. அமைச்சர்களில் இருந்து முதல்–அமைச்சர் வரையில் செயல்பட முடியாத ஒரு ஆட்சி.

    பஞ்சாயத்து போர்டு முதல் தலைமைச்செயலகம் வரை செயல்பட முடியாத நிலையில் இருக்கக்கூடிய ஒரு ஆட்சிதான் குற்றவாளியாக இருக்கக்கூடிய சசிகலாவின் பினாமியான அ.தி.மு.க.வினுடைய ஆட்சியாக இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த பினாமி ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு விரைவில் தி.மு.க. இன்னும் பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தும் என்பதை இந்த நேரத்திலே நான் தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

    குடிநீர் பிரச்சினைக்கு போராட்டம்

    இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:–

    கேள்வி:– தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதை கண்டித்து போராட்டம் நடத்துவீர்களா?

    பதில்:– பினாமியாக இருக்கக்கூடிய இந்த ஆட்சியில் குடிநீருக்கும் தட்டுப்பாடு வரக்கூடிய, தலைவிரித்து ஆடக்கூடிய நிலைக்கு தண்ணீர் பிரச்சினை உருவாகியிருக்கிறது. அதையும் சுட்டிக்காட்டக்கூடிய வகையில் ஒரு வியூகத்தை அமைத்து அதற்காக ஒரு போராட்டத்தை தி.மு.க. நடத்தும்.

    முதல்–அமைச்சரின் நிலை

    கேள்வி:– நியாயவிலை கடைகளுக்கு பொருட்கள் வாங்குவதில் அரிசி, பருப்பு போன்றவற்றுக்கு டெண்டர் விடப்படாமல் இருப்பதால் தான் தட்டுப்பாடு ஏற்பட்டு பிரச்சினை வந்துள்ளதாக கூறப்படுகிறது. டெண்டர் விடாததன் காரணம் என்ன?

    பதில்:– முதல்–அமைச்சரை பொறுத்தவரையில், இது தொடர்பாக ஒரு சிறு அறிக்கை அல்லது விளக்கத்தை கூட இதுவரையில் கொடுக்கவில்லை. காரணம் அவரை பொறுத்தவரையில், தன்னுடைய தலை தப்பித்தால் போதும் என்ற நிலையில் தான் இருந்து கொண்டிருக்கிறார். இதையெல்லாம் உணர்ந்து தான் தி.மு.க. இந்த போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறது.

    பட்ஜெட்டில் விரிவாக பேசுவோம்

    கேள்வி:– தமிழகத்தின் நிதி நிலைமை எப்படி உள்ளது?

    பதில்:– தமிழக நிதி நிலைமை பற்றி ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தேன். அதுமட்டுமல்ல, மேலும் பல ஆதாரங்களோடு தி.மு.க. எம்.எல்.ஏ. பி.டி.ஆர். தியாகராஜன் இது தொடர்பாக விளக்கம் கொடுத்து இருக்கிறார். விரைவில் சட்டமன்றம் கூட இருக்கிறது. பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அப்போது இதுகுறித்து விரிவாக பேச நாங்கள் தயாராக இருக்கிறோம்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

    News