சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 6 ரூபாய் உயர்வு
Views - 46 Likes - 0 Liked
-
மானிய சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.
விலை அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் சமையல் கியாஸ் விலையை மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் மானிய சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 5 ரூபாய் 57 காசுகள் அதிகரித்து உள்ளன. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது.
சென்னையில் இந்த ரக சிலிண்டர் விலை 5 ரூபாய் 97 காசுகள் உயர்ந்தது. அதன்படி, நேற்று முன்தினம் 422 ரூபாய் 43 காசுகளாக இருந்த மானிய சமையல் கியாஸ் சிலிண்டர் விலை நேற்று முதல் 428 ரூபாய் 40 காசுகளாக உயர்ந்தது.
மானியம் அல்லாத சிலிண்டர்
அதே நேரம், மானியம் அல்லாத 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை 14 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டது. சென்னையில் நேற்று முன்தினம் இந்த ரக சிலிண்டர் விலை 746 ரூபாய் 50 காசுகள் ஆகும். நேற்று, விலை குறைப்புக்கு பின்பு இது 731 ரூபாய் 50 காசுகளாக இருந்தது. சென்னையில் சிலிண்டருக்கு ரூ.15 குறைந்து உள்ளது.
இதன் காரணமாக சமையல் கியாஸ் மானியத்தை விட்டு கொடுத்தவர்களும், ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கும் கூடுதலாக வாங்குவோரும் பயன்அடைவார்கள்.
கடந்த மார்ச் 1–ந்தேதி எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை 86 ரூபாய் உயர்த்திய நிலையில் தற்போது விலை குறைப்பு செய்யப்பட்டு குறிப்பிடத்தக்கது.
News