" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது"

அனைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Views - 129     Likes - 0     Liked


 • தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி அரசாணை வெளியிட்டது.

  இந்த அரசாணையில், 5 ஏக்கர் வரை விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

  வழக்கு

  இதை எதிர்த்து ஐகோர்ட்டு மதுரை கிளையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.அய்யாகண்ணு பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி. முரளிதரன் ஆகியோர் நேற்று சென்னை ஐகோர்ட்டில் வைத்து தீர்ப்பு வழங்கினர்.

  அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

  விவசாயிகள் தற்கொலை

  தற்போது வானிலை நிலவரம் சீராக இல்லை. பருவமழையும் பொய்த்து போய்விடுகிறது.

  இதனால், விவசாயிகள் ஈடுசெய்ய முடியாத இழப்பை சந்திக்கின்றனர். அவர்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கிய பயிர் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

  அதே நேரம், கடன் கொடுத்த கூட்டுறவு வங்கிகளும், பிற வங்கிகளும் ஏழ்மை நிலையில் உள்ள விவசாயிகளிடம் எப்படியாவது கடனை வசூலித்து விடவேண்டும் என்ற எண்ணத்தில், சட்டப்படியான நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டு வருகின்றன.

  விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தையும், வங்கிகள் கொடுக்கும் நிர்ப்பந்தங்கள் மற்றும் தொந்தரவுகளையும் தாங்கிக்கொள்ள முடியாத விவசாயிகள், தற்கொலை செய்துகொள்கின்றனர். எனவே, விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்கவும், அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் அய்யாகண்ணுவும், விவசாயிகளின் சங்கங்களும் போராட்டங்களை நடத்துகின்றனர். ஆனால், இவர்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளின் செவிக்கு எட்டுவது இல்லை.

  தேர்தல் வாக்குறுதி

  இது ஒருபுறமிருக்க, கடந்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆளும் கட்சியான அ.தி.மு.க. பதவி ஏற்ற மே 23-ம் நாளில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, 2016-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நிலுவையில் உள்ள விவசாய பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக உத்தரவு பிறப்பித்தது.

  இந்த உத்தரவின் அடிப்படையில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை 2016-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்து அரசாணை வெளியிட்டது.

  மேலும் 3 லட்சம் பேர்

  இந்த அரசாணையில், 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த சலுகை பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.

  தற்போது தமிழக அரசின் அறிவிப்பினால், 16 லட்சத்து 94 ஆயிரத்து 145 விவசாயிகள் பெற்றுள்ள ரூ.5 ஆயிரத்து 780 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

  தற்போது மீதமுள்ள விவசாயிகளின் பயிர் கடன் தொகை ஆயிரத்து 980 கோடி ரூபாயை தள்ளுபடி செய்தால், மேலும் 3 லட்சத்து ஆயிரத்து 926 விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

  பாரபட்சம் உள்ளதா?

  இந்த வழக்கை பொறுத்தவரை, கடன் தள்ளுபடி வழங்கியதில் பாரபட்சம் உள்ளதா?, இல்லையா? என்பதை மட்டும் பார்க்க வேண்டியதுள்ளது. இந்த அரசாணையில், 5 ஏக்கர் வரை விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், கடன் வாங்கும்போது ஒரு விவசாயி தன்னிடம் உள்ள அனைத்து விவசாய நிலங்களின் விவரங்களையும் வங்கி நிர்வாகத்துக்கு கொடுத்திருப்பார் என்று கூற முடியாது.

  அவர் எவ்வளவு தொகை பயிர் கடன் வாங்குகிறாரோ? அதற்கு ஏற்ப தன்னுடைய விவசாய நிலத்துக்குரிய விவரங்களை தெரிவித்து இருப்பார். மேலும், ஒரு விவசாயி, ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று இருப்பார். கடன் வாங்கும் விவசாயி தன்னிடம் உள்ள அனைத்து விவசாய நிலங்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.

  உதாரணத்துக்கு 20 ஏக்கர் விவசாய நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகள், பயிர் கடனுக்காக 5 ஏக்கர் விவசாய நிலத்தை மட்டும் கணக்கில் காட்டியிருப்பார். எனவே, தற்போது இதுபோன்ற விவசாயிகளும், பயிர் கடன் தள்ளுபடி அரசாணையினால், பயனடைவார்கள். எனவே, 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருப்பவருக்கு மட்டும் பயிர் கடன் தள்ளுபடி என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

  தலையிட முடியும்

  மேலும், விவசாயிகளில் வைத்திருக்கும் விவசாய நிலம் குறித்து தமிழக அரசு எந்த ஒரு ஆய்வினையும் மேற்கொள்ளவில்லை. அதனால் கடன் தள்ளுபடி சலுகை பெறும் விவசாயிகளின் விவரங்களை அரசு துல்லியமாக கணிக்காமல், அரசாணையை பிறப்பித்துள்ளது. மேலும், கடன் தள்ளுபடி செய்வது என்பது மாநில அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டதாகும். தமிழக அரசின் கொள்கை முடிவு மற்றும் நிதி நிர்வாகத்தில் இந்த ஐகோர்ட்டு தலையிட முடியாது.

  அதே நேரம், இதில் பாகுபாடும், பாரபட்சமும் இருக்குமானால், அதில் இந்த ஐகோர்ட்டு தலையிட முடியும். வறட்சியினால் எல்லா விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். இதில் சிறிய விவசாயிகள், பெரிய விவசாயிகள் என்று பாகுபாடு பார்க்க முடியாது. எனவே, அனைத்து விவசாயிகளுக்கும் இந்த சலுகை சென்றாக வேண்டும்.

  வேடிக்கை பார்க்கக்கூடாது

  அதே நேரம், தமிழக அரசின் நிதி நிலை மோசமாக உள்ளது. ஏற்கனவே பயிர் கடன்களை தள்ளுபடி செய்து, ரூ.5 ஆயிரத்து 780 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை தமிழக அரசு மட்டும் ஏற்றுள்ளது. இப்போது அனைத்து விவசாயிகளுக்கும் இந்த சலுகை வழங்கப்படும்போது, ரூ.5 ஆயிரத்து 780 கோடியுடன் சேர்த்து, கூடுதலாக ஆயிரத்து 980 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.

  இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழக அரசின் கஷ்டத்தை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. நிதி சுமையை சமாளிக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். எனவே, தமிழக அரசுக்கு போதுமான நிதியுதவியை மத்திய அரசு வழங்கும் என்று நாங்கள் (நீதிபதிகள்) எதிர்பார்க்கிறோம்.

  தற்போது தமிழ்நாடு வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும், தமிழகம் வறட்சியில் சிக்கி தவிப்பதையும் மத்திய அரசு நன்கு அறிந்து இருக்கும். எனவே, தமிழக விவசாயிகளை காப்பாற்ற, தமிழக அரசுக்கு மத்திய அரசு தோள் கொடுத்து உதவவேண்டும். அதே நேரம், தமிழக அரசும், மத்திய அரசிடம் நிதி உதவி கேட்டு முறையிட வேண்டும். எனவே, விவசாய பயிர் கடன் தள்ளுபடி சலுகை பாகுபாடில்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கவேண்டும் என்று முடிவு செய்து அரசுக்கு உத்தரவிடுகிறோம்.

  அனைவருக்கும் சலுகை

  5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி சலுகை வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான செயலாகும்.

  தமிழக அரசு, கடந்த ஆண்டு ஜூன் 28-ந் தேதி பிறப்பித்த அரசாணையில், 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலங் களை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி சலுகை என்பதை நீக்கிவிட்டு, அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என்பதை குறிப்பிட்டு, அந்த அரசாணையை மாற்றி அமைக்கவேண்டும். இந்த உத்தரவை 3 மாதங்களுக்குள் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்.

  விவசாயிகளின் நிலை என்ன?

  அய்யன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் ‘உழவு தொழிலின்’ பெருமை குறித்து குறிப்பிட்டுள்ளார்.

  எருதும், ஏர் கலப்பையும், கவுரவம், சுதந்திரம், ஒழுக்கம் ஆகியவற்றின் சின்னம் என்று கூறியுள்ளார்.

  ‘இரவார் இரப்பார்க்குஒன்று ஈவர் கரவாது

  கைசெய்தூண் மாலை யவர்’ என்றும் குறளை எழுதியுள்ளார்.

  இதற்கு, ‘கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர் பிறரிடம் சென்று கையேந்த மாட்டார்கள். அதே நேரம், தம்மிடம் கையேந்தி நிற்பவர்களுக்கு, தன்னிடம் உள்ள பொருட்கள் எதையும் மறைக் காமல், அதை அவர்களுக்கு கொடுப்பார்கள்’ என்று அர்த்தம்.

  2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேளாண்மை செய்தவர்கள் எந்த நிலையில் இருந்துள்ளனர் என்பதை இதன் மூலம் நன்கு தெரிகிறது. ஆனால், தற்போதைய விவசாயிகளின் நிலை என்ன? என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து பார்க்கவேண்டும்.

  இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர். 

   

  News