" “Not only must we be good, but we must also be good for something.” – Henry David Thoreau"

‘பீம்’ ஆப் மூலம் பரிமாற்றம்: 2 புதிய பரிசு திட்டங்களை அறிவித்தார், பிரதமர் மோடி

Views - 105     Likes - 0     Liked


  • மத்திய அரசு ரொக்கமில்லா பரிமாற்றத்தை ஊக்குவித்து வருகிறது. இதற்கு ‘டிஜிதன்’ திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் ஒரு வழிமுறையாக, ‘பீம்’ ஆப் என்ற செயலியை, கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

    ‘ஆதார்’ எண்ணுக்கு பதிவு செய்யும்போது, ஒவ்வொருவரின் பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டது. அந்த விவரங்கள் ஆதார் விவர தொகுப்பில் சேகரிக்கப்பட்டுள்ளன.

    அந்த விவரங்கள் அடிப்படையில், நமது பெருவிரல் ரேகையை பதித்து பணம் செலுத்தும் வழிமுறையே ‘பீம்’ ஆப் ஆகும். இதற்காக, வியாபாரிகளிடம் பெருவிரல் ரேகையை அடையாளம் கண்டு ஏற்கக்கூடிய, ஸ்மார்ட்போன் போன்ற கருவி இருக்கும். அதில், பெருவிரல் ரேகையை பதித்து, பணம் செலுத்த முடியும்.

    ரொக்க பரிசு

    இந்நிலையில், இத்திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். இதை ஊக்குவிக்க பரிசு வழங்கும் 2 புதிய திட்டங்களையும் அவர் அறிவித்தார். மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதை அறிவித்தார்.

    இதன்படி, ‘பீம்’ ஆப் மூலம் பணம் செலுத்தும் முறைக்கு புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தினால், அறிமுகப்படுத்துபவருக்கு ரூ.10 ரொக்க பரிசு வழங்கப்படும். இத்தொகை அவரது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

    இதுபோல், ‘பீம்’ ஆப் மூலம் பரிமாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் வியாபாரிகளுக்கு ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ‘கேஷ்பேக்’ சலுகை வழங்கப்படும்.

    தினமும் ரூ.200 கிடைக்கும்

    இந்த புதிய திட்டங்களை அறிவித்து, பிரதமர் மோடி பேசியதாவது:–

    இந்த புதிய திட்டங்களின் மூலம், ஒரு நாளைக்கு 20 பேரை ‘பீம்’ ஆப்புக்கு அறிமுகப்படுத்தினால், ரூ.200 சம்பாதிக்கலாம். இளைஞர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போனை பயன்படுத்தி, நிதி பரிமாற்றம் செய்யும் காலத்துக்கு நாம் வந்திருக்கிறோம்.

    ஸ்மார்ட்போன், இன்டர்நெட், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு இல்லாத குடிமக்கள் கூட, ‘ஆதார்’ அடிப்படையிலான இந்த ‘பீம்’ ஆப் மூலம் ரொக்கமில்லா பரிமாற்றத்தில் ஈடுபட முடியும்.

    ஒரு காலத்தில், கைரேகை வைப்பவர்களை படிக்காதவர்கள் என்று சொன்ன காலம் இருந்தது. ஆனால், அதே கைரேகை, இப்போது பரிமாற்றத்துக்கு பயன்பட்டு, நமது வலிமைக்கு அடையாளமாக ஆகியுள்ளது.

    ஊழலை ஒழிக்க..

    ‘டிஜிதன்’ என்ற ரொக்கமில்லா பரிமாற்ற திட்டம் என்பது, ஊழலை ஒழிப்பதற்கான தூய்மையான முயற்சி ஆகும். இந்த திட்டத்தை ஊக்குவிக்க பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் ரூ.250 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசு பெற்றவர்கள், ரொக்கமில்லா பரிமாற்ற இயக்கத்துக்கான தூதர்களாக மாற வேண்டும்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    நாக்பூரில், புதிய ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    அம்பேத்கருக்கு அஞ்சலி

    முன்னதாக, சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, நாக்பூரில் உள்ள தீக்ஷாபூமியில் அம்பேத்கருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அந்த இடத்தில்தான், அம்பேத்கர், புத்த மதத்தை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மோடியுடன், மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத், ராமதாஸ் அத்வாலே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
    News