" வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்"

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக 25-ந் தேதி முழு அடைப்பு

Views - 47     Likes - 0     Liked


  • தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். முதன்மை செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

    காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 12.45 மணி வரை நடைபெற்றது

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    25–ந் தேதி முழு அடைப்பு

    இந்த கூட்டத்தில், தமிழகம் மற்றும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25–ந் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என்றும், 22–ந் தேதி பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

    வறட்சி மற்றும் காவிரி நீர் கிடைக்காத கொடுமையின் காரணமாக போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகள் மீது மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் 25–ந் தேதி மாநிலம் தழுவிய ‘‘முழு அடைப்பு போராட்டம்’’ நடத்துவது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.

    பொதுக்கூட்டம்

    அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களையும், முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்கான காரணங்களையும் மக்களுக்கு விளக்கிடும் வகையில், சென்னையில் 22–ந் தேதி அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது. விவசாயிகளின் நலன் கருதி மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு, தொழிற்சங்கங்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பேராதரவு தந்து விவசாயிகளின் துயர் துடைக்க துணை நிற்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த தீர்மானத்தை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சி தலைவர்களும் வரவேற்று, கையெழுத்திட்டனர்.

    சட்டசபை சிறப்பு கூட்டம்

    மேலும் விவசாயிகள் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்து, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மொத்தம் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தனி தீர்மானம் ஒன்றும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

    மு.க.ஸ்டாலின் பேச்சு

    முன்னதாக கூட்டத்தை தொடங்கி வைத்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:–

    அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய விவசாயிகளின் நலன் கருதி இந்த அனைத்துக் கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமை மறுக்கப்படுகிறது. முல்லைப் பெரியாரிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமை மறுக்கப்படுகிறது. சிறுவாணியிலிருந்து வரக்கூடிய நீர் தடுக்கப்பட்டு இன்றைக்கு தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. பாலாற்றிலிருந்து வரக்கூடிய நீரை தடுக்க தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. மேகதாது அணை கட்டப்படுவது என்று தமிழகத்தின் உரிமைகள் எல்லாம் அண்டை மாநிலங்களிடம் அடகு வைக்கக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி கொண்டிருக்கிறது.

    போராட்டம்

    ஆனால், இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டிய, இவற்றை தடுத்து நிறுத்த வேண்டிய, இதற்கெல்லாம் பரிகாரம் காண வேண்டிய மாநில அரசும், மத்திய அரசும் இவற்றை பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடினார்கள், தொடர்ந்து போராடக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் மொட்டையடிக்கக்கூடிய போராட்டம், குட்டிக்கரணம் போடக்கூடிய போராட்டம், அரை நிர்வாணப் போராட்டம், முழு நிர்வாணப் போராட்டம், சேலை கட்டி நடத்தக்கூடிய போராட்டம் என்று தொடர்ந்து பல கோணங்களில் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அ.தி.மு.க. அணிகள்

    ஆனால், இதுகுறித்து தமிழகத்தில் இருக்கக்கூடிய முதல்–அமைச்சரோ, டெல்லியில் இருக்கக்கூடிய பிரதமரோ விவசாயிகளை சந்தித்து பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காணவோ அல்லது அழைத்து பேசவோ கூட இயலாத நிலை இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது. நமக்கு மட்டுமல்ல, இந்த உணர்வு இளைஞர்களுக்கு வந்திருக்கிறது, மாணவர்களுக்கும் வந்திருக்கிறது, வியாபாரிகளுக்கும் வந்திருக்கிறது.

    ஆக, ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களும் ஆவேசப்படக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அந்த ஆவேசத்தை அண்மையில் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மூலமாக பார்த்து உணர்ந்துகொண்டோம்.

    இங்கே வந்திருக்கக்கூடிய அனைத்துக் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்துகளை இந்த கூட்டத்திலே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு அனைவரும் வர வேண்டும் என்று யோசித்து, முடிவெடுத்த நேரத்தில், மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடிய பாரதீய ஜனதா கட்சி, அதேபோல, தமிழகத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க. இன்றைக்கு இரண்டு அணிகளாக இருந்தாலும், அவர்களை குற்றம் சாட்டி, அவர்களை வலியுறுத்தி தான் தீர்மானங்களை நாம் இங்கு வடிக்க இருக்கிறோம் என்பதால், அவர்களை தவிர்த்த பிற அனைத்துக் கட்சிகளையும் அழைக்கலாம் என்று முடிவெடுத்து, அந்தநிலையில் இந்த கூட்டம் கூட்டப்பட்டு இருக்கிறது.

    ஜி.கே.வாசனுக்கு அழைப்பு

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு கடிதம் எழுதி இருந்தோம். அவருடன் தொலைபேசியில் பேசியபோது, இது நல்லதொரு ஏற்பாடு, அவசியம் நடத்த வேண்டும், ஆனால், என்னுடைய நிலை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு மாறி இருக்கிறது, இருந்தாலும் கலந்து கொள்வது பற்றி யோசித்து சொல்கிறேன், என்றார்.

    பிறகு ஒரு கடிதம் அனுப்பி வைத்திருக்கிறார். கலந்து கொள்கிறேன் என்றும் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் சொல்லாமல், வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பி இருக்கிறார். இந்த கூட்டம் வெற்றி பெற வேண்டும், எல்லா முடிவுகளுக்கும் நாங்கள் கட்டுப்படுகிறோம் என்று அதில் குறிப்பிட்டு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

    பாட்டாளி மக்கள் கட்சி

    அதேபோல, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், எங்களுடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேரடியாகவே சென்று அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார். அந்த கட்சியின் தலைவர் ஜி.கே.மணியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, நாங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவெடுத்து விட்டோம், வரப்போகிறோம். ஆனால், யார் கலந்து கொள்வது என்பதை காலையில் சொல்கிறோம், என்று தெரிவித்தார்.

    ஆனால், பல்லாவரத்தில் நடைபெற்ற அவர்களுடைய கட்சியின் கூட்டத்தில், இதில் கலந்து கொள்ள மாட்டோம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

    இவற்றையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும், உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இங்கு குறிப்பிடுகிறேன். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நான் விடுத்த அழைப்பை ஏற்று இந்த கூட்டத்துக்கு நீங்கள் எல்லாம் வந்து பங்கேற்று இருப்பது, இதனால் எங்களுக்கு பெருமை சேர்ப்பதாக நான் கருதாமல், உள்ளபடியே விவசாயிகளுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கிறது. இது விவசாயிகளுக்காக நடைபெறும் கூட்டமாக இருந்தாலும், நாட்டில் உள்ள ‘நீட்’ தேர்வு உள்ளிட்ட சில முக்கியமான பிரச்சினைகளை எல்லாம் குறித்து, இங்கு சில வரைவுத் தீர்மானங்களை இயற்ற முடிவெடுத்து உள்ளோம்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

    News