நாகர்கோவிலில் நாஞ்சில் பொழுதுபோக்கு பொருட்காட்சி தொடங்கியது
Views - 74 Likes - 0 Liked
-
நாகர்கோவில் பீச்ரோட்டில் இந்து கல்லூரி அருகில் உள்ள மைதானத்தில் நாஞ்சில் பொழுதுபோக்கு பொருட்காட்சி நேற்று தொடங்கியது. 11–வது முறையாக நடைபெறும் இந்த பொருட்காட்சி, இந்த வருடம் ராட்சத கழுகு, வெள்ளை மாளிகையுடன் கூடிய ஜூராஸிக் ரோபர்ட் மிருகங்கள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விஜயகுமார் எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி நடைபெறுகிறது. இரண்டு மலைகளுக்கிடையே கம்பீரமாக 14 அடி உயரத்தில் 40 அடி நீளமுள்ள ராட்சத கழுழு தன் இறக்கைகளையும், தன் தலையும் அசைத்து பொருட்காட்சியை காண வருவோரை வரவேற்கும் வகையில் நுழைவுவாயில் அமைந்துள்ளது.
வெள்ளை மாளிகை போல்...
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள வெள்ளை மாளிகையை தத்ரூபமாக நம் கண் முன்னே நிற்கும் விதத்தில் 150 அடி நீளமும், 80 அடி உயரத்தில் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. குகையின் வழியாக வரும் போது பொதுமக்களை வரவேற்கும் விதத்தில் 3 யானைகள் முகப்பட்டம் கட்டி யானையின் மேல் 3 பேர் கம்பீரமாக வீற்றிருக்க, யானைகள் துதிக்கையை உயர்த்தி பார்வையாளர்களை வரவேற்கிறது.
மேலும் சிங்கம், புலி, குதிரை, வரிக்குதிரை, காட்டு யானை, ஒட்டக சிவிங்கி, மனித குரங்கு, பனிக்கரடி, டைனோசர் மற்றும் ஆதிவாசிகள் தங்கள் குடும்பத்துடன் மான்கள் சூழ குடில் அமைத்து வீற்றிருக்கும் காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. மேலும் சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில் ராட்டினங்கள், படகு பலூன் போன்றவையும், ஜையன்ட்வில், கொலம்பஸ், டோரா டோரா பிரேக் டான்சும் உண்டு. வீட்டு உபயோக பொருட்கள் வாங்க ஏராளமான ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளன என்று நாஞ்சில் பொழுதுபோக்கு பொருட்காட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
News