நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு
Views - 40 Likes - 0 Liked
-
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நாடு முழுவதும் பரவலாக இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. ஆனாலும், மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதனையடுத்து, நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிற்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 7-ம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு, அத்தேர்வுக்கு விண்ணப்பிக்க www.cbseneet.nic.in என்ற இணையத்தளத்தில் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டன. தமிழகத்தில் மட்டும் மாணவர்கள் 88,478 பேர் உட்பட நாடு முழுவதும் மாணவர்கள் 11,35,104 பேர் விண்ணப்பித்தனர்.
கடந்த ஆண்டில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகமாகும். தொடர்ந்து, விண்ணப்பித்த மாணவர்களில் தகுதியானவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், நாடு முழுவதும் சுமார் 2,200 மையங்களில், மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள 104 நகரங்களில், தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாமி, பெங்காலி ஆகிய 10 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு, பகல் 1 மணி வரை நடக்கும். தேர்வு முடிவுகள் வருகிற ஜூன் மாதம் 8-ம் தேதி வெளியிடப்படும்.News