ஆரல்வாய்மொழி, குலசேகரம் பகுதிகளில் இடியுடன் மழை கொட்டியது மக்கள் மகிழ்ச்சி
Views - 39 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்து போனதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. நாகர்கோவில் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான முக்கடல் அணை வறண்டதன் காரணமாக குடிநீருக்காக மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
கோடை மழையாவது கைகொடுக்குமா என்று ஏங்கிய மக்கள் ஆங்காங்கே கோவில்களில் பிரார்த்தனை செய்தனர். அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் பெரும்பாலும் வீடுகளிலேயே முடங்கினர்.
இடியுடன் மழை கொட்டியது
இந்த நிலையில் நாகர்கோவிலில் நேற்று காலையில் இருந்து மேகமூட்டமாக காணப்பட்டது. பகல் 1 மணி அளவில் திடீரென கார்மேகம் சூழ்ந்தது. அதைத்தொடர்ந்து 1.30 மணி அளவில் மழை பெய்தது. இந்த மழை 15 நிமிடங்கள் நீடித்தது.
அதே சமயம் ஆரல்வாய்மொழியில் இடியுடன் தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் கொட்டியது. இதே போல் தோவாளை, வெள்ளமடம், லாயம் பகுதிகளிலும் மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளிலும், தெருக்களிலும் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. வெயிலின் தாக்கத்தில் தவித்த மக்களுக்கு இந்த கோடை மழை மகிழ்ச்சியை தந்தது. ஆரல்வாய்மொழியில் தெருக்களில் ஓடிய மழைநீரில் சிறுவர்கள் குளித்தும், விளையாடியும் மகிழ்ந்தனர்.
2 மணி நேரம்
இதே போல் தக்கலை, குலசேகரம் பகுதிகளிலும் இடியுடன் மழை சுமார் 2 மணிநேரம் கொட்டியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மதியம் கருமேகம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் விளக்கை போட்டுக்கொண்டு வாகனங்களை ஓட்டி சென்றனர்.
மேலும் கன்னியாகுமரி, மார்த்தாண்டம், கடலோர பகுதிகளான கொல்லங்கோடு, மார்த்தாண்டன் துறை, வள்ளவிளை, நீரோடி, ஊரம்பு, இரவிபுத்தன்துறை, சின்னத்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.News