" Work hard, stay humble, and follow your heart."

‘108’ ஆம்புலன்ஸ் மற்றும் ‘102’ தாய்சேய் நல வாகனம்: கூடுதல் வாகன சேவையை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

Views - 65     Likes - 0     Liked


  • சாலை விபத்துகளில் ஒவ்வொரு ஆண்டும் விலைமதிப்பற்ற மனித உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள், பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாவதோடு, குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபரை இழந்து, பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகின்றனர்.
     
    விபத்துகளை குறைக்கவும், உயிர் இழப்புகள் ஏற்படாமல் இருக்கவும் ‘108’ ஆம்புலன்ஸ் சேவை, விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல், தலைக்காய பிரிவுகளை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
     
    கூடுதலாக 25 ஆம்புலன்ஸ்
     
    ‘108’ ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் தற்போது 855 அவசரகால வாகனங்கள் இயங்கி வருகின்றன. ‘108’ ஆம்புலன்ஸ் சேவையை கடந்த ஆறு ஆண்டுகளில் 12.13 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்கள் உள்பட 48.19 லட்சம் நபர்கள் பயன்படுத்தி உள்ளனர்.
     
    இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ‘108’ ஆம்புலன்ஸ் சேவையை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில், ‘108’ ஆம்புலன்ஸ் சேவைக்காக 3 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 25 புதிய வாகனங்களின் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 18-ந் தேதி (நேற்று) கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
     
    தாய்சேய் நல வாகன சேவை
     
    மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் சேய்களை அவர்கள் இல்லத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லவும், ஒரு வயதிற்குட்பட்ட உடல்நலம் குன்றிய குழந்தைகளை, சிகிச்சை முடிவடைந்த பிறகு அல்லது தடுப்பூசி அளிக்கப்பட்ட பின் வீடு திரும்பும் குழந்தைகள் மற்றும் தாய்மார்களை அவர்கள் இல்லத்திற்கு அழைத்து செல்லவும், அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்பவர்களை அவர்களின் இல்லத்திற்கு அழைத்து செல்லவும், ‘102’ தாய்சேய் நல வாகன சேவைத் திட்டம் 2013-ம் ஆண்டு சென்னையில் முதலில் தொடங்கி வைக்கப்பட்டது.
     
    பின்னர் இந்த திட்டம் படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தில் தற்போது 61 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
     
    ‘102’ வாகனம் கூடுதலாக 10
     
    இந்த ‘102’ தாய்சேய் நல வாகன சேவையை மேம்படுத்தும் வகையில், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக 86 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 10 புதிய வாகனங்களின் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கிவைத்தார்.
     
    இந்த நிகழ்ச்சியின்போது ‘108’ ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ‘102’ தாய்சேய் நல வாகனம் ஆகிய வாகனங்களின் உள்ளே சென்று, அவ்வாகனங்களில் அவசரகால முதலுதவி சிகிச்சைக்காக பொருத்தப்பட்டுள்ள கருவிகள் மற்றும் இதர வசதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
     
    ஜிபிஎஸ் உள்ளது
     
    மேற்கண்ட 35 புதிய வாகனங்களிலும் புவியியல் தகவல் அமைப்பு ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ‘108’ ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு, விபத்து பகுதிகளுக்கு வாகனங்களை உடனடியாக அனுப்பிட இயலும்.
     
    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநில நலவாழ்வு குழுமத்தின் குழும இயக்குனர் டேரஸ் அகமது மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
     
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

     

    News