தேக்குமரம் கடத்தியவரை பிடிக்க சென்ற வனஅதிகாரிகளை தாக்கி கொல்ல முயற்சி
Views - 245 Likes - 0 Liked
-
குழித்துறை,குலசேகரம் அருகே பேச்சிப்பாறை வனப்பகுதிகளில் இருந்து தேக்கு உள்ளிட்ட உயர் ரக மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் வனப்பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர் ரக மரங்களை குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு அறுவை மில்லில் இருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இந்த கடத்தலில் முக்கிய புள்ளியாக செயல்பட்டது பேச்சிப்பாறையை சேர்ந்த சவுந்தர் (வயது 35) என்பது தெரிய வந்தது. இதையடுத்து சவுந்தரை அதிகாரிகள் தேடி வந்தனர்.மார்த்தாண்டம் அருகே கோட்டகம் பகுதியில் சவுந்தர் பதுங்கி இருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் அருண் (30), ஜாண் மிரான்(38), விஜயன்(40) ஆகிய 3 பேரும் காரில் கோட்டகம் பகுதிக்கு சென்றனர். அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த சவுந்தரை பிடித்து காரில் ஏற்றுவதற்காக கொண்டு சென்றனர்.அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பல், சவுந்தரை விடுவிக்குமாறு வனத்துறை அதிகாரிகளிடம் தகராறு செய்தது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் கைகளில் வைத்திருந்த ஆயுதங்களால் காரை அடித்து உடைத்து வன அதிகாரிகளையும் தாக்கியது.இதுபற்றி தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாண் விக்டர், சுந்தரலிங்கம், ஈஸ்வரபிள்ளை, ஜாண் கென்னடி ஆகியோர் தலைமைலான போலீசார் அங்கு விரைந்து சென்று 3 வன அதிகாரிகளையும், கார் டிரைவர் சுரேஷ்யும் (35) மீட்டனர்.பின்னர், படுகாயமடைந்த வன அதிகாரிகள் 3 பேரையும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.மேலும், மரங்களை கடத்திய சவுந்தரையும், அதிகாரிகளை தாக்கிய கும்பலை சேர்ந்த லில்லிபாய் (53) என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டகத்தை சேர்ந்த விஜயகுமார்(35), சவுந்தர், சந்தோஷ், ரதீஷ், ரெபின், ஸ்டீபன், சுபின், ரெஜி, சுந்தர்ராஜ் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.News