" “If opportunity doesn't knock, build a door.”"

நாகர்கோவிலில் பழங்குடியின மக்கள் சாலை மறியல் போராட்டம் 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

Views - 278     Likes - 0     Liked


  • நாகர்கோவில், 

    வன உரிமைகள் சட்டப்பிரிவின்படி குடியிருப்பு வாரியாக கிராம சபைகள் அமைக்க வேண்டும். பழங்குடியின மக்கள் வீடு கட்டுவதற்கு கல், மணல், மரம் உள்ளிட்டவை எடுத்து பாரம்பரியமாக பயன்படுத்தி வருவதை தடுக்கக்கூடாது. வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்.

    புலிகள் காப்பகம் அமைக்கும்போது ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள மக்களிடமும், கிராம சபைகளிலும் கருத்து கேட்டு முடிவு எடுக்க வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டம் நடத்துவது என்று தமிழக ஆதிவாசிகள் மகாசபா குமரி மாவட்ட பிரிவு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி நேற்று காலை 11 மணி அளவில் மோதிரமலை, தச்சமலை, மூக்கரக்கல், வெள்ளாம்பிமலை உள்ளிட்ட பழங்குடியின கிராம மக்கள் வேன்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் நாகர்கோவில் வந்தனர். அவர்கள் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி அருகில் இருந்து ஆண்களும், பெண்களுமாக ஏராளமானவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். கைகளில் கருப்புக்கொடிகளை ஏந்தியபடியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் நடந்து சென்றனர். இதையொட்டி மாவட்ட வனத்துறை அலுவலகம் முன்பாக ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.

    ஊர்வலம், வனத்துறை அலுவலகம் முன் வந்ததும், வனத்துறை அலுவலகத்துக்குள் யாரும் செல்ல முடியாத வகையில் அதன் கதவுகளை போலீசார் இழுத்து பூட்டினர். இதையடுத்து ஊர்வலமாக வந்தவர்கள், வனத்துறை அலுவலகம் முன்புள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழக ஆதிவாசிகள் மகாசபை மாநில தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். போராட்டக்குழுவைச் சேர்ந்த ராமச்சந்திரன், நாகப்பன், கிருஷ்ணன்குட்டி, சவுந்தர், ரமணி முரளி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    பழங்குடியின மக்களின் போராட்டத்தால் அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது. நாகர்கோவில்- பூதப்பாண்டி சாலை, வடசேரி- பார்வதிபுரம் சாலை, வடசேரி- ஒழுகினசேரி சாலை என அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வடசேரியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    போராட்டம் குறித்து தகவல் அறிந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்துக்கு வந்து பழங்குடியின மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பிரதிநிதியாக ராஜன் ஆகியோரிடம் மாவட்ட வனத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை விவரங்களை ராஜன், சாலைமறியலில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் கூறினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- “குமரி மாவட்ட நிர்வாகத்தால் நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகள் தொடர்பாக அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வோம் என்று வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அன்றைய தினம் பழங்குடியின மக்கள் கிராமங்களில் இருந்து தலா 2 பேர் வீதம் வருமாறும் கூறியுள்ளார். அரசு தரப்பில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார். நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம் என்று கூறினார். அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    காலை 11.15 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மதியம் 12.30 மணி வரை நடந்தது. சாலைமறியலால் சுமார் 1¼ மணி நேரம் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. போராட்டத்தையொட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    News