நாகர்கோவிலில் பரபரப்பு: கிறிஸ்தவ ஆலயத்தில் சொரூபம் உடைந்து கிடந்தது - போலீசார் விசாரணை
Views - 292 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
நாகர்கோவில் கோட்டாரை அடுத்த இளங்கடை பகுதியில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் தினமும் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு திருப்பலி நடைபெறும். அதேபோல் நேற்று அதிகாலையில் ஆலயம் திறக்கப்பட்டது. அப்போது சிலர் ஜெபம் செய்வதற்காக ஆலயத்துக்கு வந்தனர்.
அங்கு ஆலய பீடப்பகுதியில் மரத்தால் ஆன சிறிய மேஜை மீது வைக்கப்பட்டு இருந்த அந்தோணியார் சொரூபம் கீழே விழுந்து உடைந்து கிடந்தது. இதைப்பார்த்து ஜெபம் செய்ய வந்தவர்களில் ஒருவர் ஆலய பங்குப்பேரவை நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனே பங்குப்பேரவை நிர்வாகிகள், பக்தர்கள் திரண்டு வந்து பார்த்தனர்.
யாரோ அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் ஆலயத்துக்குள் நுழைந்து, சொரூபத்தை உடைத்து சென்றிருக்கலாமோ? என்ற சந்தேகம் நிர்வாகிகளுக்கு ஏற்பட்டது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
மேலும் இதுதொடர்பாக பங்குப்பேரவை நிர்வாகி ஸ்டீபன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலுக்குள் மர்ம நபர்கள் நுழைந்து சொரூபத்தை கீழே தள்ளி உடைத்தார்களா? அல்லது ஜெபம் செய்ய வந்தவர்களில் யாராவது ஒருவர் கைபட்டதில் தவறி கீழே விழுந்து சொரூபம் உடைந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று நாகர்கோவில் இளங்கடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.News