" “If opportunity doesn't knock, build a door.”"

குறைகளை சொல்வதற்கு மட்டும் கிராமசபையை பயன்படுத்தக்கூடாது கலெக்டர் பேச்சு

Views - 285     Likes - 0     Liked


  • தென்தாமரைகுளம்,

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று சாமிதோப்பு ஊராட்சி அலுவலகம் முன் கிராமசபை கூட்டம் நடந்தது. சாமிதோப்பு ஊராட்சி தனி அலுவலர் கீதா தலைமை தாங்கினார். ஊராட்சிகளின் இணை இயக்குனர் செய்யது சுலைமான் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட முன்னாள் பால்வளத்துறை தலைவர் எஸ்.ஏ.அசோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பேச்சியம்மாள், கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் ஆறுமுகப்பெருமாள், சுகாதாரத்துறை துணை இயக்குனர் மதுசூதனன் ஆகியோர் தங்கள் துறை சம்பந்தப்பட்ட கருத்துக்களை கிராம மக்களிடம் எடுத்து கூறினர்.

    கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசும் போது கூறுகையில், பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தை குறை கூறுவதற்கு மட்டுமே பயன்படுத்தக் கூடாது. தமிழக அரசு கிராம மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் அறிவித்து உள்ளன. அவைகள் தகுதியானவர்களுக்கு கிடைத்து இருக்கிறதா என்பது குறித்து விவாதம் செய்யப்பட வேண்டும். மேலும் கிராம பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ஊராட்சியை முழுமை பெற்ற ஊராட்சியாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

    கிராமத்தில் முழு சுகாதாரத்துக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களின் கருத்து கேட்பு நிகழ்ச்சி நடந்தது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, அங்கன்வாடி மையம், தூய்மை பாரதம் ஆகியவை சார்பில் நடந்த கண்காட்சி முகாம்களை கலெக்டர் பார்வையிட்டார். கூட்டத்தில் சாமிதோப்பு ஊர் தலைவர் மதிவாணன், வடக்கு தாமரைகுளம் கூட்டுறவு சங்கத் தலைவர் பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கோட்டையடி புதூர் பள்ளிவாசல் முன்பு நடந்த கரும்பாட்டூர் கிராம சபை கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமை தாங்குவதாக இருந்தது. ஆனால் அவருக்கு பதிலாக யூனியன் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கூட்டத்துக்கு வந்தனர்.

    கூட்டத்தில் தேரிவிளை மற்றும் கரம்பவிளை பகுதிகளில் இயங்கி வரும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊராட்சியில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்று தீர்மானங்கள் எழுதி கூட்டம் நடத்தியவர்களிடம் கிராம மக்கள் கொடுத்தனர். அவர்கள் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாது என்று கூறி கூட்டத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், யூனியன் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் சாமிதோப்பில் கலெக்டர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெறுவதை அறிந்து கரும்பாட்டூர் கிராம மக்கள் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார தலைவர் ஜெகன் ஆகியோர் தலைமையில் பேரணியாக சாமிதோப்புக்கு வந்தனர். அங்கு கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து முறையிட்டனர். மனுவை ஏற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார். அதைதொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    செண்பகராமன்புதூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டம் அதிகாரிகள் தாமதமாக வந்ததால் பொதுமக்களிடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டனர். பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து 10 நாட்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி செயலாளர் செல்வகுமார் கூறியதை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    News