குமரி மாவட்ட கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
Views - 310 Likes - 0 Liked
-
சுசீந்திரம்,
குருபகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. நேற்று இரவு 7.41 மணிக்கு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்தார்.
இதனால் ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் லாபம் அடைகின்றனர். மேஷம், மிதுனம், சிம்மம், கும்பம், கன்னி, விருச்சிகம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து பலன் பெறலாம்.
இதையொட்டி குமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. கோவிலில் முதல் கடவுளாக திகழும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. நேற்று அதிகாலையிலேயே பக்தர்கள் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் குவியத் தொடங்கினர். பக்தர்கள் பரிகாரங்கள் செய்யும் வகையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை, வெள்ளை அரளி மாலை, மஞ்சள் நிற துண்டு, முல்லைப்பூ மாலை மற்றும் தங்களது ராசி பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்தனர். மேலும் பரிகார பூஜைகளும் செய்து வழிபட்டனர்.
மேலும் 27 நட்சத்திரத்தின் அடிப்படையில் 27 பொருட்களால் தட்சிணா மூர்த்திக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் சுசீந்திரம் தாலக்குளம் பிள்ளையார்கோவில், தளியல் மகாதேவர் கோவில், நாகர்கோவில் வடசேரி சோழராஜா கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில், தெரிசனங்கோப்பு ராகவேஸ்வரர் கோவில், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில், தாழக்குடி அழகேஸ்வரி ஜெயந்தீஸ்வரர் கோவில், பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவில், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர்கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன்கோவில் மற்றும் குமரிமாவட்டத்தில் குருபகவான் சன்னதி உள்ள அனைத்து கோவில்களிலும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ததோடு குருப்பெயர்ச்சி பரிகார பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.News