கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டம்
Views - 246 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடந்தது.
தமிழக அரசின் சத்துணவு திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறுகின்ற ஊழியர்களுக்கு ஓட்டுமொத்த தொகை என்ற பெயரால் பணப்பலன் வழங்குவதை மாற்றி அரசின் பணிக்கொடை விதிகளின்படி சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானிய தொகையை உயர்த்தி வழங்குதல் அவசியம். தகுதி உள்ள அமைப்பாளர்களை அரசின் பிறதுறை காலிப்பணியிடங்களில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் வில்பிரட் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் தமிழரசன், செயற்குழு உறுப்பினர் தங்கம், ஏஞ்சல், ஜெபமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் மாவட்டம் முழுவதிலும் இருந்து சத்துணவு பெண் ஊழியர்கள் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
போராட்டத்தையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.News