" “If opportunity doesn't knock, build a door.”"

சுசீந்திரம் அருகே பட்டப்பகலில் துணிகரம்: போலீஸ்போல் நடித்து ஆசிரியையிடம் 6 பவுன் நகை கொள்ளை - மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

Views - 249     Likes - 0     Liked


  • மேலகிருஷ்ணன்புதூர்,
     
    குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள காக்கமூர், சுபிக்‌ஷா கார்டன் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 69), ஓய்வுபெற்ற ஆசிரியை. இவருக்கு, ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மகனும், ஒரு மகளும் வெளியூரில் வசித்து வருகிறார்கள். மற்றொரு மகளான சுப்ரஜாவுடன் பத்மாவதி வசித்து வருகிறார். சுப்ரஜா, கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
    இந்தநிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் பத்மாவதி வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க சுசீந்திரத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
     
    அவர் சுசீந்திரம் தெற்குமண் பகுதியில் சென்றபோது, மோட்டார்சைக்கிளில் 2 டிப்-டாப் ஆசாமிகள் வந்துகொண்டிருந்தனர். பின்னர், அவர்கள் சற்று தூரத்தில் மோட்டர்சைக்கிளை நிறுத்திவிட்டு பத்மாவதியின் அருகில் வந்தனர்.
     
    அப்போது, அந்த ஆசாமிகள் தாங்கள் போலீஸ் என்றும், பெண்கள் அதிகமாக நகையை அணிந்து கொண்டு வெளியில் வரக்கூடாது என்றும், அவ்வாறு வந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினார்கள். மேலும் நீங்கள் அணிந்திருக்கும் நகைகளை கழற்றி தந்தால் அதை பாதுகாப்பாக ஒரு காகிதத்தில் பார்சல் செய்து தருவதாக கூறினர். அதை கேட்ட பத்மாவதி தனது பாதுகாப்புக்கு தானே சொல்கிறார்கள் என்று உடனே அணிந்திருந்த 6 பவுன் நகைகளை கழற்றி கொடுத்தார். அதை வாங்கிய ஒரு ஆசாமி நகையை பார்சல் செய்தான். மற்றொரு ஆசாமி பத்மாவதியிடம் பேசிக்கொண்டிருந்தார். சில நிமிடத்தில் அந்த ஆசாமிகள் பார்சலை பத்மாவதியின் பையில் வைத்து பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள் என்று கூறிவிட்டு சென்றனர்.
     
    அதைதொடர்ந்து பத்மாவதி கடைக்கு சென்று பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் நடந்தவற்றை தனது மகள் சுப்ரஜாவிடம் கூறினார்.
     
    இதில் சந்தேகமடைந்த சுப்ரஜா பையில் வைத்திருந்த பார்சலை எடுத்து பார்த்தார். அதில் 2 கவரிங் வளையல்களும் அதனுடன் சிறு கற்களும் இருப்பதை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போதுதான் டிப்-டாப் ஆசாமிகள் போலீஸ் போல் நடித்து, நகைகளை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
     
    பின்னர், இதுகுறித்து பத்மாவதி சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.
     
    மேலும் போலீசார் டிப்-டாப் மர்ம ஆசாமிகள் 2 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.
     
    பட்டப்பகலில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் போலீஸ் போல் நடித்து 6 பவுன் நகையை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் சுசீந்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    News