பேச்சிப்பாறை அணை அருகே வீடுகளை இடிக்க எதிர்ப்பு; பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
Views - 259 Likes - 0 Liked
-
அருமனை,
பேச்சிப்பாறை அணையின் அருகே சீரோ பாயிண்டில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 48 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். தற்போது பேச்சிப்பாறை அணையில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள மறுகால் மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீர் சீரோபாயிண்டில் குடியிருப்புகள் உள்ள இடம் வழியாக வெளியேறும் நிலை உள்ளது.இதனால், வீடுகளை காலி செய்யுமாறு 48 குடும்பத்தினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அத்துடன் வீடுகளை காலி செய்ய நேற்று கடைசி நாள் என கெடுவும் விதித்திருந்தனர்.
இதற்கிடையே அங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு சரியான மாற்று இடமும், வீடு கட்டுவதற்கு நிதியும் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பொதுப்பணித்துறையினர் வீடுகளை இடித்து அகற்ற வருவதாக தகவல் பரவியது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதரணி தலைமையில் முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, தி.மு.க. மேல்புறம் ஒன்றிய செயலாளர் சிற்றார் ரவிச்சந்தின், கடையல் பேரூராட்சி முன்னாள் தலைவர் சேகர் மற்றும் பொதுமக்கள் பலர் திரண்டனர். அவர்களிடம் கடையல் வருவாய்கிராம அதிகாரி பேச்சு நடத்தினார். அப்போது வீடுகளை இடித்து அகற்றும் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.News