9-ம் நாள் திருவிழா: புனித சவேரியார் பேராலய தேர்பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு
Views - 240 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் பிரசித்தி பெற்றதாக கருதப்படும் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருப்பலி மற்றும் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்று வருகின்றன.திருவிழாவின் 8-ம் நாளான நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மேல் தேர் பவனி நடந்தது. தேரின் பின்னால் ஏராளமான பக்தர்கள் கும்பிடு நமஸ்கார நேர்ச்சை நிறைவேற்றினர்.
இந்த நிலையில் 9-ம் நாள் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றன. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றினார். அதன்பிறகு இரவு 10.30 மணிக்கு தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தேரில் நல்லமிளகு, உப்பு மற்றும் மலர் மாலைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
இறுதி நாள் விழாவான இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு நடைபெறும் புனித சவேரியார் பெருவிழா திருப்பலியில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை மறையுரையாற்றுகிறார். அதன்பிறகு 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 11 மணிக்கு தேர் பவனியும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி கேப் ரோட்டில், செம்மாங்குடி ரோடு சந்திப்பில் இருந்து ரெயில்வே ரோடு சந்திப்பு வரை தற்காலிக கடைகள் அமைக்கப்படும். இதே போல இந்த ஆண்டும் கேப் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த எண்ணற்ற கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர். இதனால் சவேரியார் பேராலயத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ரோட்டில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் இருந்ததால் கடைகளில் வியாபாரம் படுஜோராக நடந்தது. மேலும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது.News