கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
Views - 280 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10-ந் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அதாவது பெண் கிராம நிர்வாக அலுவலர்கள், அவரவர் சொந்த மாவட்டங்களில் பணிபுரிய மாறுதல் வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு மின்வசதி, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.இதே போல குமரி மாவட்டத்திலும் கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதுவரை வேலை நிறுத்த போராட்டம், கோரிக்கை அடங்கிய துண்டு பிரசுரம் வினியோகம் செய்யும் போராட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.இந்த நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக குமரி மாவட்டத்தில் 4 தாலுகா அலுவலகங்கள் முன்பும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நாகேஸ்வரகாந்த் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, “தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கடந்த 10-ந் தேதி முதல் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எங்களது சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை நாங்கள் வாபஸ் பெறவில்லை. மாறாக வேறு ஒரு சங்கம் தான் வாபஸ்பெற்று இருக்கிறது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் போராடுவோம்“ என்றனர்.கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டம் காரணமாக கிராம நிர்வாக அலுவலக பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன.News