புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனங்களில் சென்று பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் கைது
Views - 257 Likes - 0 Liked
-
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனங்களில் சென்று பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நாகர்கோவில்,
2018-ம் ஆண்டு இன்று (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. நள்ளிரவு 12 மணிக்குப்பிறகு 2019-ம் ஆண்டு உதயமாகிறது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். வாலிபர்கள் ஆங்காங்கே கூடி புத்தாண்டை புதுமையான முறைகளில் வரவேற்பது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவர்கள் ஆலயங்களில் நடைபெறும் புத்தாண்டு வழிபாடுகளில் பங்கேற்பார்கள்.இந்தநிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணி முதல் மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனை நடைபெறும். இந்த சோதனையின்போது மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள், போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மக்கள் கூடும் கடைவீதிகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், முக்கிய சந்திப்புகள், கிறிஸ்தவ ஆலய பகுதிகள் அனைத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கிராமங்கள், நகரங்கள் அனைத்திலும் இருசக்கர வாகன ரோந்து போலீசாரும், நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசாரும் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மதுபோதையில் இருசக்கர வாகனங்களில் ‘ரேஸ்‘ சென்று பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். எனவே யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இன்னிசை கச்சேரி போன்ற நிகழ்ச்சிகள் நடத்த போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்று கச்சேரிகள் நடத்துபவர்கள் 10 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.News