தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 3 கடைகளுக்கு அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை
Views - 264 Likes - 0 Liked
-
நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 3 கடைகளுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.நாகர்கோவில்,சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டி 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்து இருக்கிறது. இதற்கான உத்தரவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இந்த தடை உத்தரவு நேற்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது. இதே போல தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குமரி மாவட்டத்திலும் நேற்று முதல் நிறுத்தப்பட்டது.இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து பல்வேறு கடைக்காரர்கள் தாங்களாகவே முன் வந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அழித்து வருகிறார்கள்.வாக்குவாதம்இதன் மூலம் மக்கள் மீண்டும் பழமைக்கு திரும்பி இருக்கிறார்கள். ஏன் எனில் டீ கடைகளில் பார்சல் டீ கொடுப்பதை கடைக்காரர்கள் நிறுத்தி உள்ளனர். அதோடு பார்சல் டீ வாங்க வருபவர்கள் பாத்திரம் கொண்டு வருமாறும் அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனால் சில ஆண்டுகளுக்கு முன் டீ வாங்க பாத்திரம் கொண்டு செல்வது போல நேற்றும் ஏராளமான மக்கள் டீ வாங்குவதற்கு பாத்திரமும், கையுமாக வந்தனர்.இதே போல ஓட்டல்களிலும் சாப்பாடு பார்சல் வாங்க செல்பவர்கள் தாங்களே வீட்டில் இருந்து பை கொண்டு சென்றனர். எனினும் சிலர் ஓட்டல்களிலேயே பை கேட்டு வாக்குவாதம் செய்ததை காணமுடிந்தது.இறைச்சி கடைகள்மேலும் இறைச்சி கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதற்கு பதிலாக தாமரை இலைகளை இறைச்சி கடைக்காரர்கள் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். இறைச்சியை தாமரை இலையில் வைத்து கட்டி கொடுக்கிறார்கள்.ஆனால் தாமரை இலைகள் தினமும் கிடைக்குமா? என்று இறைச்சி கடைக்காரர்களிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் பெரும்பாலான குளங்களில் தாமரை படர்ந்திருக்கிறது. இதனால் தாமரை இலைக்கு தட்டுப்பாடு ஏற்படாது. அதையும் மீறி தட்டுப்பாடு ஏற்பட்டால் வாழை இலையை பயன்படுத்துவோம்” என்றனர்.கண்காணிப்பு குழுக்கள்எனினும் குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை முழுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கிறதா? அல்லது ஏதாவது கடைகளில் மறைமுகமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க 100 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காணிப்பு குழுவினர் நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு கடைகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார்கள். ஆனால் பெரும்பாலான கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.நாகர்கோவில் நகரை பொறுத்த வரையில் ஆய்வு செய்வதற்காக 2 குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது நகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் நகர் நல அதிகாரி கின்ஷால் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவும், என்ஜினீயர் மற்றும் திட்ட அலுவலர் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு குழுவும் என 2 குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.கடைகளில் ஆய்வுஇந்த நிலையில் நகர்நல அதிகாரி கின்ஷால் தலைமையில் ஆய்வாளர்கள் பகவதிபெருமாள், மாதவன்பிள்ளை ஆகியோர் அடங்கிய குழு வடசேரி பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தியது. அப்போது ஒரு டீ கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் இருந்தன. உடனே அதிகாரிகள் அந்த கப்புகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த கடைக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல மேலும் 2 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.இதுகுறித்து நகர்நல அதிகாரி கின்ஷாலிடம் கேட்டபோது, “பிளாஸ்டிக் தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்துவதற்காக வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள சுமார் 20 கடைகளில் ஆய்வு நடத்தினோம். அப்போது பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை. எனினும் 3 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன. அதாவது டீ கப்புகள், உறிஞ்சு குழல்கள் ஆகியவை இருந்தன. உடனே அவற்றை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும். பிளாஸ்டிக் தடை உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்” என்றார்.News