" “If opportunity doesn't knock, build a door.”"

கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் 27-ந்தேதி கும்பாபிஷேகம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

Views - 257     Likes - 0     Liked


  • கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆய்வு நடத்தினார்.
    கன்னியாகுமரி,

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.22½ கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. 5½ ஏக்கர் நிலத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஏழுமலையான் வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருடபகவான் சன்னதி போன்ற சன்னதிகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.
    இந்த கோவில் முன்பகுதியில் 40 அடி உயர கொடிமரம் நிறுவப்பட உள்ளது. இதற்கான கொடிமரம் கோவிலில் தயார்நிலையில் உள்ளது.

    இந்த கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. 27-ந் தேதி காலையில் மகாகும்பாபிஷேக விழா நடக்கிறது. அதைத் தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக விழாவில் சாதுக்கள், சன்னியாசிகள், மடாதிபதிகள், ஆதீனங்கள், ரிஷிகள், மகான்கள், ஜீயர்கள், மற்றும் முக்கிய விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள். இதைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

    இதையொட்டி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் நேற்று மாலை வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். அவர் கும்பாபிஷேகத்தையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

    அப்போது கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயற்பொறியாளர் சந்திரமவுலிரெட்டி, கோவில் ஸ்தபதி முனுசாமிரெட்டி, உதவி பொறியாளர்கள் அமர்நாத்ரெட்டி, பார்த்தசாரதி (மின்பிரிவு), திட்டப் பொறியாளர் அப்சாராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    News