" “If opportunity doesn't knock, build a door.”"

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

Views - 249     Likes - 0     Liked


  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    அடிலெய்டு, 
     
    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது.
     
    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஷான் மார்ஷ் 131 (123) ரன்களும், மேக்ஸ்வெல் 48 (37) ரன்களும் எடுத்தனர்.
    இதனை தொடர்ந்து இந்திய அணி 299 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாட தொடங்கியது.  இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (43), ஷிகர் தவான் (32), ராயுடு (24) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
     
    42வது ஓவரின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோலி 99 ரன்களும், தோனி 17 ரன்களும் எடுத்திருந்தனர்.
     
    இந்த நிலையில், விராட் கோலி 42.1வது ஓவரில் 101 (108 பந்துகள் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) ரன்கள் எடுத்து சதம் விளாசினார்.  இது அவரது 39வது சதம் ஆகும்.
     
    இது, ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா நாட்டில் அவரது 5வது சதம்.  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடித்துள்ள 6வது சதம்.  இந்திய அணி 2வது பேட்டிங் செய்யும்பொழுது (சேசிங்) கோலி எடுத்துள்ள 24வது சதம் இதுவாகும்.  சர்வதேச அளவிலான சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் (100 சதம்), ரிக்கி பாண்டிங் (71 சதம்) ஆகியோருக்கு அடுத்து கோலி (64 சதம்) 3வது இடத்தில் உள்ளார்.
     
    இந்த நிலையில் கோலி 104 ரன்களில் வெளியேறினார்.  தோனி (55) மற்றும் கார்த்திக் (25) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  இந்திய அணி 49.2வது ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கான 299 ரன்களை எடுத்தது.  இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

     
    News