குமரியில் 2-வது நாளாக போராட்டம்: 3 இடங்களில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் சாலை மறியல் 1,090 பேர் கைது
Views - 255 Likes - 0 Liked
-
குமரியில் 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் 1,090 பேர் கைது செய்யப்பட்டனர்.நாகர்கோவில்,
1-4-2003-ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர்.குமரி மாவட்டத்திலும் இந்த போராட்டம் நடந்தது. நேற்று 2-வது நாளாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணிகளுக்கு செல்லாமல் புறக்கணித்தனர். ஆசிரியர்கள் பணிக்கு செல்லாததால் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் கல்வி கற்க முடியாமல் பாதிக்கப்பட்டனர். பாடம் நடத்த ஆசிரியர்கள் வராததால் ஒரு சில பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. செயல்பட்ட பள்ளிகளிலும் குறைவான ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர். வடலிவிளை அரசு பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில் பயிற்சி ஆசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டது. இதேநிலை தான் அரசு அலுவலகங்களிலும் காணப்பட்டது. ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் அரசு பணிகள் முற்றிலும் முடங்கின.
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பொருத்த வரையில் பெரும்பாலான துறைகளில் பணியாளர்கள் இல்லை. வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. எனினும் ஒரு சில துறை அலுவலகங்கள் திறந்திருந்தன. ஆனாலும் அங்கு பணியாளர்கள் இல்லை. வெறும் மேஜையும், நாற்காலிகளும் தான் கிடந்தன.
இதுபோல தாசில்தார் அலுவலகங்களும் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. அந்த வகையில் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலகம், கல்குளம் மற்றும் விளவங்கோடு தாசில்தார் அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடின.
2-வது நாள் போராட்டத்தையொட்டி நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் இணைந்து சாலைமறியல் போராட்டம் நடத்தினர். முன்னதாக அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் எட்வின் பிரகாஷ் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், மாவட்ட நிர்வாகிகள் தியாகராஜன், பகவதியப்பபிள்ளை, ராஜ்குமார், சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். இவர்களில் சிலர் தங்களது காதுகளில் பூக்களை தொங்கவிட்டு இருந்தனர். அரசு தங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காததால் இவ்வாறு பூக்களை தொங்கவிட்டு இருப்பதாக அவர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து அனைவரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் அரசு ஊழியர்கள் திரளாக பங்கேற்றதால் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக அங்கு உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் போலீசார் கைது செய்தனர். அந்த வகையில் 175 பெண்கள் உள்பட மொத்தம் 510 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அனைவரையும் வாகனங்களில் ஏற்றி மண்டபத்தில் அடைத்தனர்.
இதே போல தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன் நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மரிய மிக்கேல், கனகராஜ், பாலசந்தர், நாஞ்சில் நிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 215 பெண்கள் உள்பட 240 பேரை போலீசார் கைது செய்தனர்.
விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 340 பேரும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 3 இடங்களில் நடந்த மறியலில் 1,090 பேர் கைது செய்யப்பட்டனர்.News