" “If opportunity doesn't knock, build a door.”"

கன்னியாகுமரியில் கோலாகலம் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Views - 287     Likes - 0     Liked


  • கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    நாகர்கோவில், 

    முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் ரூ.22½ கோடியில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. விவேகானந்தா கேந்திர வளாகத்தில் சுமார் 5½ ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் 7½ அடி உயரத்தில் வெங்கடாசலபதி சிலை, 3 அடி உயரத்தில் பத்மாவதி தாயார் சிலை, 3 அடி உயர ஆண்டாள் சிலை, 3 அடி உயர கருட பகவான் சிலை மற்றும் கோவில் முன்பாக 40 அடி உயர கொடிமரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நடைபெறுவதை போன்று இங்கும் அனைத்து வகையான விழாக்களும், பூஜைகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 22-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தினமும் யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின. காலை 7 மணி அளவில் வெங்கடாசலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள் மற்றும் கருட பகவான் ஆகிய சாமி சிலைகளுக்கு அபிஷேகம் நடந்தது.

    7.10 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. திருப்பதி கோவில் குடைகள் பிடித்து 10 கலசங்களில் புனித நீரை அர்ச்சகர்கள் தலையில் சுமந்து வந்தனர். கோவிலை ஒரு முறை சுற்றி வந்த பிறகு தேங்காய் உடைக்கப்பட்டு புனித நீரை மூலஸ்தானத்துக்கு எடுத்துச் சென்றனர். மந்திரங்கள் ஓதி புனித நீரை விமான கோபுரங்களுக்கு அர்ச்சகர்கள் எடுத்துச் சென்றனர்.

    முதலில் வெங்கடாசலபதி சன்னதி கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது தீபாராதனை காட்டியபடி அர்ச்சகர்கள் மந்திரம் ஓதினர். தொடர்ந்து பத்மாவதி தாயார் சன்னதியில் உள்ள கலசத்துக்கும், ஆண்டாள் சன்னதியில் உள்ள கலசத்துக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது. திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் 60 அர்ச்சகர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்தனர்.

    கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றிய போது 3 கருடன்கள் வானில் வட்டமிட்டன. உடனே பக்தர்கள் பக்தி பரவசத்தோடு கோவிந்தா...கோவிந்தா... கோஷங்கள் எழுப்பினர். பக்தர்களின் கோவிந்தா... கோஷங்கள் விண்ணை அதிரச் செய்தது. கோபுர கலசங் களுக்கு காட்டப்பட்ட தீபாராதனையை விமான கோபுரத்தில் இருந்தபடியே பக்தர்களை நோக்கி அர்ச்சகர்கள் காட்டினர். அப்போதும் பக்தர்கள் பக்தி பரசவத்துடன் கோவிந்தா... கோவிந்தா... என்று முழக்கமிட்டனர். தீபாராதனையை பார்த்து பக்தர்கள் வணங்கினர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    பின்னர் வெங்கடாசலபதிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அப்போது வெங்கடாசலபதி சன்னதி சாத்தப்பட்டு இருந்தது. இதேபோன்று பத்மாவதி தாயார், ஆண்டாள் சன்னதிகளும் அடைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. எனினும் பக்தர்கள் சன்னிதானம் முன்பாக அமர்ந்து இருந்தனர். இதற்கிடையே 40 அடி உயர கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

    சுவாமிக்கு வெள்ளி அங்கி அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் காலை 8.30 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர்.

    காலை 8.45 மணி முதல் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக அங்கு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு இருந்தது. தரிசனம் முடித்து வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, புளியோதரை, தயிர்சாதம் மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
    News