கீரிப்பாறை, கன்னியாகுமரியில் ரப்பர் தோட்டம் உள்பட 3 இடங்களில் தீ விபத்து
Views - 258 Likes - 0 Liked
-
அழகியபாண்டியபுரம்,
கீரிப்பாறை அருகே பரளியாறு பகுதியில் அரசு ரப்பர் தோட்டத்தில் திடீரென தீ பிடித்தது. அங்கு பாதுகாப்பில் இருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், காற்று பலமாக வீசியதால் தீ மள... மள...வென பரவியது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். எனினும் பல ஏக்கர் பரப்பில் ரப்பர் மரங்கள் எரிந்து நாசமாயின. சேதமதிப்பு ரூ.6 லட்சம் எனக்கூறப்படுகிறது.இந்த தீ விபத்து குறித்து அரசு ரப்பர் கழக களஅலுவலர் அருள்சிங் கீரிப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் ரப்பர் தோட்டத்திற்கு யாராவது தீ வைத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி, பழத்தோட்டம் பகுதியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு எதிரே சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடந்தது. இந்த குப்பையில் திடீரென தீ பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ பரவ தொடங்கியது. இதை பார்த்ததும் அந்த பகுதி பொதுமக்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இதுபோல், கன்னியாகுமரி அருகே உள்ள சரவணந்தேரி பகுதியில் குப்பையில் தீப்பிடித்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.News