" “If opportunity doesn't knock, build a door.”"

ஜனநாயக உரிமை குறித்து மம்தா பானர்ஜி பேசுவது கேலி கூத்தாக உள்ளது ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

Views - 269     Likes - 0     Liked


  • நாகர்கோவில், 

    குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயற்குழு கூட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-நாடாளுமன்றத்தில் பா.ஜனதா அரசு சமர்ப்பித்த இடைக்கால பட்ஜெட்டை தேர்தல் அறிக்கை என்றே சொல்லலாம். குறிப்பாக சம்பந்தப்பட்ட பல புள்ளி விவரங்களை வெளியிடாமல் தவறான தகவல்களோடு பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-2018-ம் ஆண்டில் வேலையின்மை அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய அரசு கடைப்பிடித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட தவறான பொருளாதார கொள்கைகள் தான் என அறிக்கை கூறுகிறது.

    மத்திய பட்ஜெட்டில் குமரி மாவட்டம் சம்பந்தப்பட்ட சில அறிவிப்புகள் வெளியாகும் என குமரி மாவட்ட மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் கடந்த 5 ஆண்டுகளாக குமரி மாவட்டத்திற்கு எந்த புதிய ரெயில் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. நாகர்கோவில் டவுண் ரெயில் நிலைய நடைமேடை உயரத்தை அதிகரிக்க மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எந்த முயற்சியும் செய்யவில்லை.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் போராட்டம் நடத்தினர். பின்னர் மாணவ-மாணவிகளின் நலன் கருதி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். ஆனால் அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக 3 ஆயிரம் ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்துள்ளது. 2 ஆயிரம் ஆசிரியர்களை இடமாற்றம் செய்து இருக்கிறது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மாநில அரசு கோர்ட்டு உத்தரவை புறக்கணித்து வேலை நிறுத்த உரிமையை பறிக்கும் வகையில் பழிவாங்கும் நடவடிக்கையில் மேற்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீது மிகப்பெரும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட மம்தா பானர்ஜி, ஜனநாயக உரிமை குறித்து பேசுவது கேலி கூத்தாக உள்ளது. மத்திய அரசு சி.பி.ஐ.யை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    News