மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு: தக்கலையில் கடை அடைப்பு வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தால் பரபரப்பு
Views - 255 Likes - 0 Liked
-
தக்கலை,
குமரி மாவட்டம் தக்கலை கொல்லன்விளை பகுதியில் இருந்து மணலி வரை மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல்நாட்டு விழா 19-ந் தேதி நடக்கிறது.
இந்தநிலையில் தக்கலையில் மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம் மற்றும் தக்கலை நகர வர்த்தகர் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதன் ஒருபகுதியாக நேற்று தக்கலையில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தக்கலை மற்றும் பத்மநாபபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 400-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
மேலும் தக்கலை பழைய பஸ் நிலையம் சந்திப்பில் பத்மநாபபுரம் நகர தொழிலாளர் வணிகர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு பத்மநாபபுரம் நகர வர்த்தகர் சங்க தலைவர் ரேவன்கில் தலைமை தாங்கினார். பொது செயலாளர் விஜய கோபால், பொருளாளர் சங்கர மூர்த்தி, துணைத்தலைவர் சண்முகம், செயலாளர் மோசஸ் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரத போராட்டத்தை மேற்கு மாவட்ட வர்த்தகர் சங்க தலைவர் அல்அமீன் தொடங்கி வைத்தார். மாநில நிர்வாகிகள் அலெக்சாண்டர், விஜயன், ஜோசப்ராஜ் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாலையில் உண்ணாவிரத போராட்டம் நிறைவு பெற்றது. இதனை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் சின்னதுரை முடித்து வைத்தார். தக்கலையில் மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.News