" “If opportunity doesn't knock, build a door.”"

நிலநடுக்கத்தின் தாக்கம்: கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; படகு போக்குவரத்து ரத்து

Views - 276     Likes - 0     Liked


  • கன்னியாகுமரி, 

    புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் அதன் அருகே மற்றொரு பாறையில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையையும் படகில் சென்று பார்ப்பது வழக்கம்.இதற்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் 3 படகுகளை இயக்கி வருகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் திடீரென வங்க கடலில் சீற்றம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து உடனே படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    நேற்று முன்தினம் மாலை தொடங்கிய கடல் சீற்றம் நேற்றும் தொடர்ந்து காணப்பட்டது. கடலில் ராட்சத அலைகள் எழுந்து கரையில் உள்ள பாறைகளில் மோதி சிதறியது. கடற்கரையில் நின்ற சுற்றுலா பயணிகள் இதனை கண்டு அச்சமடைந்தனர். விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதற்காக நேற்று அதிகாலையில் இருந்தே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.

    ஆனால் கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கடல் இயல்பு நிலைக்கு வந்த பின் மீண்டும் போக்குவரத்து நடைபெறும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

    ஆனால், சென்னையில் வங்க கடலில் நேற்று காலை 7.02 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதன் தாக்கம் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதி அதிகாரிகள் நாள் முழுவதும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தனர். இதனால் படகுத்துறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழ மணக்குடி, மணக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

    News