" “If opportunity doesn't knock, build a door.”"

1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது கலெக்டர் தகவல்

Views - 262     Likes - 0     Liked


  • நாகர்கோவில், 

    குமரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமானது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரிகள், நகர்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் என மொத்தம் 1,236 இடங்களில் நடைபெற்றது.

    மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதாவது ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கன்னியாகுமரி பூம்புகார் படகுத்துறை மற்றும் காந்தி மண்டபம் ஆகிய இடங்களில் 20 முகாம்கள் நடத்தப்பட்டன. இதுபோக  பஸ் வசதி இல்லாத மலைப்பகுதிகளில் 14 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன. தோட்ட மலை மற்றும் தச்சமலை பகுதிகளுக்கு படகுகளில் சென்று சொட்டு மருந்து வழங்கப்பட்டது.   

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார். பின்னர் ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கினார். இதனையடுத்து அவர் பேசுகையில், “குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரே கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 53 ஆயிரத்து 370 குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர். முகாம் ஆய்வு பணிகளை 146 பேர் செய்தனர்’’ என்றார். 

    நிகழ்ச்சிக்கு ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாநில கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் (பொறுப்பு) டாக்டர் ராதாகிருஷ்ணன், குழந்தைகள் நல அலுவலர் சுரேஷ், அ.தி.மு.க. நகர செயலாளர் ஜெயசந்திரன், ஜெயசீலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

     

    News