குமரி மாவட்டத்தில் உரிமம் பெற்ற 300 துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு
Views - 268 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்காக குமரி கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையும் புதிதாக திறக்கப்பட்டு உள்ளது. அதாவது குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறும் நாஞ்சில் கூட்டரங்கில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு இருக்கிறது.இந்த கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் புகார்கள் வருகின்றன. நேற்று காலை வரை சுமார் 50 புகார்கள் வரை வந்திருந்தன. அந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கட்சி கொடி கம்பங்கள், பேனர்கள் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் விதமாக பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தேர்தல் பாதுகாப்பு கருதி குமரி மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்களது துப்பாக்கிகளை தாங்களாகவே முன் வந்து அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கும்படி கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டு இருந்தார்.
குமரி மாவட்டத்தில் சுமார் 400 பேர் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். கலெக்டர் அறிவிப்பை தொடர்ந்து அவர்கள், தங்களது துப்பாக்கியை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்து வருகிறார்கள். நேற்றைய நிலவரப்படி 300 பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்து உள்ளனர். மீதமுள்ளவர்கள் விரைவில் ஒப்படைக்கும்படி கலெக்டர் பிரசாந்த் வடநேரே கேட்டுக்கொண்டுள்ளார்.News