நாகர்கோவிலில் நடுரோட்டில் வாலிபரை தாக்கிய கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பரவியதால் பரபரப்பு
Views - 270 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் பரபரப்பாக காணப்படும் சாலைகளில் பொதுப்பணித்துறை அலுவலக சாலையும் ஒன்று. இந்த சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நேற்று முன்தினம் கல்லூரி மாணவர்கள் சிலர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 5 பேர் கும்பல் வேகமாக மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கினார்கள். பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென ஒரு வாலிபரை சரமாரியாக தாக்கினர்.இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர், அந்த கும்பலை சேர்ந்தவர்களை தாக்க முற்படுகிறார். ஆனால் அவரால் முடியவில்லை. இதனையடுத்து 5 பேரும் சேர்ந்து வாலிபரை விரட்டி விரட்டி நடுரோட்டில் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தால் அங்கு பொதுமக்கள் கூடினர். இதைத் தொடர்ந்து அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி அந்த கும்பல் அழைத்துச் சென்றது.
ஆனால் தாக்கப்பட்ட வாலிபர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. மேலும் அந்த கும்பல் எதற்காக வாலிபரை தாக்கியது? என்றும் தெரியவில்லை. இதற்கிடையே வாலிபர் தாக்கப்பட்ட சம்பவம் அனைத்தும் அங்குள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களான வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக்கில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி கோட்டார் போலீசாரிடம் கேட்டபோது, “பொதுப்பணித்துறை அலுவலக சாலையில் நடந்த தாக்குதல் சம்பவம் பற்றி எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. பாதிக்கப்பட்ட வாலிபர் புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றனர்.News