சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
Views - 317 Likes - 0 Liked
-
தென்தாமரைகுளம்,
அய்யா வைகுண்ட சுவாமி சாமிதோப்பு தலைமைப்பதியில் வடக்கு வாசலில் 6 வருடங்கள் தவம் இருந்தார். தவத்தை நிறைவேற்றி விட்டு சீடர்கள் மற்றும் தனது பக்தர்களோடு முட்டப்பதிக்கு சென்று அங்குள்ள பாற்கடலில் புனித நீராடினார். பின்னர் இறைவனாக அவதாரம் எடுத்து, அன்று மாலை தன்னுடைய பக்தர்களோடு மீண்டும் சாமிதோப்பு தலைமை பதிக்கு வந்ததாக அகிலத்திரட்டு கூறுகிறது.
இந்த நாளை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சாமிதோப்பு தலைமை பதியில் இருந்து முட்டப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்ளும் முத்துக் குடை ஊர்வலம் செல்வது வழக்கம். அதன்படி இந்த வருட முத்துக்குடை ஊர்வலம் நேற்று காலை நடைபெற்றது.
இதனையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதியில் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து ஊர்வலம் புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஊர்வலத்தை பாலபிரஜாபதி அடிகளார் தொடங்கி வைத்தார். பையன் நேம்ரிஸ் தலைமை தாங்கினார். முத்துக்குடை பிடித்த பக்தர்கள் முன் செல்ல ஊர்வலம் கரும்பாட்டூர், விஜயநாகரி, ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம் வழியாக முட்டப்பதியை சென்றடைந்தது. அங்கு பக்தர்கள் கடலில் புனித நீராடினர். பின்னர் முட்டப்பதியில் பணிவிடை, தொடர்ந்து அன்னதர்மம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலையில் முட்டபதியிலிருந்து மீண்டும் ஊர்வலம் சாமிதோப்பு நோக்கி புறப்பட்டது. இரவு 7 மணிக்கு ஊர்வலம் மீண்டும் சாமிதோப்பை வந்தடைந்தது. இந்த ஊர்லத்தில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.News