" “If opportunity doesn't knock, build a door.”"

காவல்துறையை ஏவல்துறையாக மாற்றும் அ.தி.மு.க. அரசை அகற்ற வேண்டும் கமல்ஹாசன் பேச்சு

Views - 311     Likes - 0     Liked


  • நாகர்கோவில்,

    கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளராக எபினேசர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று இரவு குமரி மாவட்டம் வந்தார். பின்னர் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நான் ஊருக்கும், அரசியலுக்கும் தாமதமாக வந்திருக்கிறேன். இந்த தொகுதியில் போட்டியிடும் எபினேசர் போராட்ட குணம் உடையவர். இங்கு போராட்டம் தேவைப்படுவதால் அவரை டெல்லிக்கு அனுப்ப நான் ஏற்பாடு செய்திருக்கிறேன். ஆனால் நீங்கள் தான் அவரை அனுப்பி வைக்க வேண்டும். ஒரு மாற்றத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது, இந்த கூட்டம். இந்த கூட்டம் காசு கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல. நேர்மையாளர்கள் பலரும் எஞ்சியிருக்கிறார்கள் என்பதற்கு பேருதாரணம் இந்த கூட்டம்.

    மக்களை நோக்கி துப்பாக்கியை திருப்பும் தைரியம் இவர்களுக்கு வந்தது என்றால் அதற்கு நாம் மெத்தனமாக இருந்தது தான் காரணம். கனிம வளங்கள், மண் மற்றும் மக்களை சூறையாடிவிட்டு பணத்தை எங்கே கொண்டு போவார்கள். நான் வெறும் கலைஞனாக சாக மறுக்கிறேன். உங்கள் தொண்டனாக வாழ நினைக்கிறேன்.

    மத்திய மந்திரி ஒருவர் (நிதின் கட்காரி) 8 வழிச்சாலையை அமைத்தே தீருவோம் என்று கொக்கரிக்கிறார். கோர்ட்டு மறுத்தாலும் மக்களிடம் பேசி, அதிக விலை கொடுத்தாவது கொண்டு வந்தே தீருவோம் என்கிறார். ஆனால் யாருக்காக இந்த சாலை போடுகிறீர்கள்? இவர்களை அகற்ற இது தான் நல்ல வாய்ப்பு. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜாலியன் வாலாபாக்கில் மக்களை நோக்கி சுட்டவன், இங்கு வந்த விரோதி. ஆனால் நாம் நியமித்த அரசு நம்மை நோக்கி சுடுகிறது. எனவே இனி நாம் மெத்தனமாக இருக்க கூடாது.

    ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று மீண்டும், மீண்டும் போராட்டம் நடக்கும். அதற்கு நான் தலைமை வகிக்கிறேனோ, இல்லையோ ஆனால் நான் அங்கு இருப்பேன். மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் முகம் புதிதாக இருக்கும் என்பதால் என் முகத்தையும், முகவரியையும் நான் அவர்களுக்கு கொடுத்திருக்கிறேன். இவர்கள் சத்தியம் செய்துவிட்டு இங்கு வந்திருக்கிறார்கள். வேட்பாளர் மீது ஆதாரபூர்வமாக புகார் கொடுத்தால் அவர் கொடுத்துள்ள ராஜினாமா கடிதம் அவருக்கு அனுப்பி வைக்கப்படும். பணமும், பானமும் நாம் வினியோகிப்பது இல்லை. மேற்கு கடற்கரையை எப்படி வளர்த்தோமோ அதுபோல கிழக்கு கடற்கரையையும் மாற்ற வேண்டும். மக்களின் தொண்டனாக இருப்பதே எனக்கு பெருமை. கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், கார் தொழிற்சாலைகள் உள்ளிட்ட மாசு ஏற்படுத்தாத ஆலைகளை கொண்டு வர முடியும். 50 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவோம் என்று நாம் சொன்னால் கொக்கரிக்கிறார்கள்.

    கலை உலகினர் ஐ.பி.எல். கிரிக்கெட்டை நிறுத்த போனார்கள். ஆனால் கோட்டையில் 234 பேர் விளையாடுகிறார்கள் என்றும், அவர்களின் விளையாட்டை நிறுத்துங்கள் என்றும் நான் கூறினேன். எங்கள் வேட்பாளர்கள் டெல்லிக்கு சென்று இங்கே நல்லரசு அமைய அஸ்திவாரம் இடுவார்கள்.

    தமிழகம் பெரும் வர்த்தக வெற்றியை நாட்டிற்கு காட்டும் போது, அதில் நீங்கள் பங்காளிகளாக மாற வேண்டும். தைரியமாக நிற்கிறது மக்கள் நீதி மய்யம். இருப்பதில் பெரிய கூட்டணி, நம் கூட்டணி தான். இதை வெல்ல எந்த கூட்டணியும் துணியாது. துணிந்தாலும் வெல்லாது.

    தமிழக மக்கள் கொடுக்கும் உற்சாகமும், நம்பிக்கையும் என்னை இப்படி பேச வைக்கிறது. மக்களின் குரலாக மாறி நான் பேசிக்கொண்டிருக்கிறேன். எங்களுக்கு பிரசாரம் செய்ய கொடுத்த இடத்தில் மேடை அமைத்த பிறகு மாற்ற சொல்வார்கள். ஊருக்குள் வரக்கூடாது என்பார்கள். வந்தாலும் பேசக்கூடாது என்று சொல்வார்கள். மக்கள் நீதி மய்யம் மக்களின் கட்சி. இது மக்களின் ஆட்சியாக மாறும். காவல்துறைக்கு நன்றி சொல்கிறேன். திறமையானவர்கள் பலர் காவல் துறையில் இருக்கிறார்கள். ஆனால் சிலரை ஏவல் துறையாக மாற்றி இருக்கிறது இந்த அரசு (அ.தி.மு.க.). எனவே இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

     

    News