சாய்னாவின் சந்தோஷமும் சந்திக்கும் சவாலும்
Views - 278 Likes - 0 Liked
-
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் ஆட்டங்கள் கடினமாக இருக்கப் போகின்றன என்றும், அதற்கேற்பத் தனது ஆட்டத் திறனையும் உடல்தகுதியையும் மேம்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருப்பதாகவும் கூறுகிறார்.‘‘முந்தைய 3 ஒலிம்பிக் போட்டிகளைவிட, அடுத்துவரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி மிகவும் கடினமாக இருக்கப் போகிறது. சீன பேட்மிண்டன் வீராங்கனைகள் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அவர் களைத் தவிர வேறு சில நாட்டு வீராங்கனைகளும் அருமையாக ஆடி வருகிறார்கள். ஆக, எங்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.’’சாய்னா இப்படிக் கூறும் அதேவேளையில், ‘‘நான் இப்போதைக்கு ஒலிம்பிக் பற்றியோ, அதற்கு நான் எப்படித் தகுதி பெறுவேன் என்பது பற்றியோ யோசிக்கவில்லை. பல்வேறு தொடர்களிலும் எப்படி நன்றாக ஆடுவது, எனது ஆட்டத்தை இன்னும் எவ்வாறு மேம்படுத்துவது, காயங்கள் அடையாமல் எப்படி உடல்தகுதியோடு இருப்பது என்பது குறித்துத்தான் சிந்திக்கிறேன்’’ என்கிறார்.இந்தியாவில் இருந்து சாய்னா, சிந்து இருவரும் டோக்கியோ ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க வேண்டும் என்றால், 2020 ஏப்ரல் 30-ல் வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் அவர்கள் டாப்-16 இடங்களுக்குள் இருக்க வேண்டும்.டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சாய்னா பங்கேற்றால், அது இவரது நான்காவது ஒலிம்பிக் போட்டியாக இருக்கும். ஏற்கனவே 2008, 2012, 2016-ல் சாய்னா ஒலிம்பிக்கில் ஆடி யிருக்கிறார். 2008-ல் காலிறுதி வரை முன்னேறிய சாய்னா, 2012-ல் வெண்கலம் வென்றார். ஆனால் 2016-ல் காயம் காரணமாக இவர் சீக்கிரமாகவே வெளியேறி விட்டார்.களத்தில் எதிராளிகளுடன், காயங்கள், உடல்நலக் குறைவுகளையும் சாய்னா எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது.கடந்த மாதம், ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்பின்போது கணையத்தில் ஏற்பட்ட நோய்த் தொற்று காரணமாக, சாய்னா இந்திய ஓபனில் ஆட முடியாது போயிற்று.2016-ல் தனது மூட்டு காயத்துக்காக அறுவைசிகிச்சை செய்துகொண்ட சாய்னா நேவால், அதிலிருந்து எப்படி மீண்டும் வந்திருக்கிறார் என்று கேட்டால்...‘‘நான் தொடர்ந்து போராடி வருகிறேன். எனது ஆட்டத்திறனை மேம்படுத்தவும், முடிந்தவரை அதிகமான போட்டிகளில் வெல்லவும் முயல்கிறேன். என்னால் செய்ய முடிந்தது இதுதான். காரணம், முடிவுகளை என்னால் கணிக்க முடியாது’’ என்று எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் சொல்கிறார்.இன்னொரு விதத்தில் தனக்கு மகிழ்ச்சி என்றும் சாய்னா கூறுகிறார்...‘‘கடந்த சில ஆண்டுகளில் நான் சில தொடர்களில் வென்றிருக்கிறேன். காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற நான், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலத்துடன், டென்மார்க் ஓபனில் இறுதியை எட்டினேன். இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் வாகை சூடினேன். இதுபோன்ற வெற்றிகள்தான், தொடர்ந்து நான் நன்றாக விளையாடத் தூண்டுதலாகவும் ஊக்கமாகவும் உள்ளன. தற்போது என் உடல்நலத்திலும் ஆட்டத்திலும் அதிக அக்கறை செலுத்தும் நான், எதிர்கொள்ளும் அடுத்த ஒவ்வொரு தொடரிலும் வெல்ல ஆசைப்படுகிறேன்.’’உலக பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டிருக்கும் நெருக்கடியான போட்டி அட்டவணை, வீரர்- வீராங்கனைகள், பயிற்சியாளர்களின் விமர் சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. புதிய அட்டவணைப்படி, முன்னணி வீரர்- வீராங்கனைகள் ஆண்டின் 15 தொடர்களில் பன்னிரண்டிலாவது விளையாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.இதுபற்றிய தனது கருத்தை தான் உலக பேட்மிண்டன் சம்மேளனத்துக்குத் தெரிவித்ததாகவும், ஆனால் அதற்குப் பலன் ஏதும் இல்லை என்றும் சாய்னா வருத்தம் தெரிவிக்கிறார்...‘‘ஓராண்டில் இவ்வளவு அதிகமான போட்டிகளில் விளையாட எங்கள் உடம்பு ஒத்துழைக்காது. நாங்கள் மனிதர்கள். எந்திரங்கள் அல்ல. எனவே, அதிகமான போட்டிகளில் எப்படி எங்களால் ஆட முடியும் என்று தெரியவில்லை. போட்டிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, பரிசுத்தொகையை அதிகரிக்க வேண்டும் என்றுதான் வீரர்- வீராங்கனைகள் கோருகிறோம். அதாவது, டென்னிசைப் போல. அங்கு நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகள்தானே முக்கியமாக இருக்கின்றன?உலக பேட்மிண்டன் சம்மேளனம் ஏன் இத்தனை போட்டிகளை நடத்த வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. இப்போதெல்லாம், வீரர், வீராங்கனைகளாகிய எங்களுக்கு உட்கார்ந்து பேசக்கூட நேரம் கிடைப்பதில்லை. அடுத்தடுத்த போட்டிகள் என்றுதான் ஓடிக்கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு டிசம்பரில் நாங்கள் இது குறித்து உலக அமைப்பு நிர்வாகிகளுடன் உட்கார்ந்து பேச முயன்றோம். ஆனால் அது நடக்கவில்லை. எனவே, அவர்களின் அட்டவணைப்படிதான் ஆடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.’’சாய்னா நேவால் இந்தச் சவாலையும் சமாளித்து வரட்டும்.News