" “If opportunity doesn't knock, build a door.”"

கோடைவிடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

Views - 289     Likes - 0     Liked


  • கன்னியாகுமரி, 

    இந்தியாவின் தென்கோடி முனையில் புகழ்பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரி உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று சுற்றுலா பயணிகள் ரசிப்பார்கள்.பின்னர் காந்தி, காமராஜர் நினைவு மண்டபம், முக்கடல் சங்கமிக்கும் பகுதியையும் பார்வையிட்டு மகிழ்வார்கள். தொடர்ந்து பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்தநிலையில் கன்னியாகுமரிக்கு மகுடம் சூட்டும் விதமாக தற்போது திருப்பதி வெங்கடாசலபதி கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கோடைவிடுமுறையையொட்டி நேற்று வழக்கத்தை விட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடுதலாக குவிந்தனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது. வெளிமாநில சுற்றுலா பயணிகளும் குடும்பத்துடன் வந்து பல்வேறு இடங்களை சுற்றி பார்த்ததை காண முடிந்தது.

    கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர். இதற்காக அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து படகில் சென்று ரசித்தனர். இதேபோல் பகவதி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    அதே சமயத்தில் குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் தங்களுடைய குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை கடைகளில் வாங்கி மகிழ்ந்தனர். இதனால் வியாபாரமும் களை கட்டியது. சுற்றுலா பயணிகள் ஏராளமான வாகனங்களில் வந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவி, வட்டக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    News