நாகர்கோவில் அனந்தன் குளம் படகு சவாரி கைவிடப்பட்டதா? பொதுமக்கள் அதிர்ச்சி
Views - 296 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
நாகர்கோவில் நகர மக்கள் மற்றும் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் பொழுது போக்க வசதியாக நாகர்கோவில் அனந்தன் பாலம் அருகில் உள்ள அனந்தன் குளத்தில் படகு சவாரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இங்கு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் ரூ.5 லட்சம் செலவில் படகு குழாமும், ரூ.15 லட்சம் செலவில் 15 படகுகளும் விடப்பட்டன.இந்த படகு சவாரி தொடங்கிய நேரத்தில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து படகு சவாரி செய்தனர். இதனால் முதலில் மக்களிடம் இதற்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. நாட்கள் செல்லச்செல்ல படகு சவாரி செய்ய வருபவர்களின் கூட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் வருவாய் வெகுவாக குறைந்து விட்டது.
கோடைகாலமான தற்போது பொதுமக்களும், பள்ளி மாணவ- மாணவிகளும் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டும் நிலையில் குளத்தில் தண்ணீர் வற்றி, வெகுவாக குறைந்து விட்டது. எனவே இந்த குளத்தில் படகுகள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வருவாய் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. அதேநேரத்தில் படகு சவாரி நடந்தாலும், நடக்காவிட்டாலும் இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டிய கட்டாய நிலையில் சுற்றுலா வளர்ச்சிக்கழக அதிகாரிகள் இருந்து வருகிறார்கள். இதனால் குளத்தில் தண்ணீர் இல்லாதது, போதிய வருவாய் இல்லாதது போன்ற காரணங்களால் தொடர்ந்து இங்கு படகு சவாரியை நடத்த முடியாமல் சுற்றுலா வளர்ச்சிக்கழக அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.
மேலும் வருவாய் இல்லாமல் எவ்வித பயனும் இன்றி கிடக்கும் படகுகளை கோடை சீசன் உள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்க சுற்றுலா வளர்ச்சிக்கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்பேரில் 4 படகுகள் சென்னை முட்டுக்காடு பகுதிக்கும், 6 படகுகள் கொடைக்கானலுக்கும் என 10 படகுகள் கொண்டு செல்லப்பட்டன. இன்னும் 5 படகுகள் மட்டுமே அனந்தன் குளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சீசனுக்காக வேறு ஏதேனும் பகுதிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் இந்த படகுகளும் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் நாகர்கோவில் அனந்தன் குளம் படகு சவாரி நிரந்தரமாக கைவிடப்பட்டதாக தகவல் பரவியதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
நாகர்கோவில் அனந்தன் குளத்தில் படகு குழாம், சவாரிக்காக விடப்பட்டுள்ள 15 படகுகள் ஆகியவற்றுக்கு ரூ.20 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். இந்த படகு குழாமில் டிக்கெட் கொடுப்பவர்கள், காவலாளி, பெண் துப்புரவாளர், படகு இயக்குபவர்கள் என மொத்தம் 6 பேர் பணிபுரிந்து வந்தனர். படகு சவாரி நடந்தாலும், நடக்காவிட்டாலும் இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.90 ஆயிரம் சம்பளமாக வழங்க வேண்டும். ஆனால் அதற்கு தகுந்த வருவாய் இந்த படகு சவாரி மூலம் கிடைக்கவில்லை. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.2 ஆயிரத்துக்கும், மற்ற நாட்களில் ஆயிரம் ரூபாய்க்கும் மட்டுமே படகு சவாரி நடைபெறுகிறது. நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்துக்கு படகு சவாரி நடந்தால்தான் ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் சம்பளம் போக, ரூ.2 ஆயிரத்தை படகு பராமரிப்பு மற்றும் இதர செலவினங்களுக்கு பயன்படுத்த முடியும். போதிய வருவாய் இல்லாததால் இந்த படகு சவாரி தொடங்கியதில் இருந்து இதுவரை எங்களுக்கு ரூ.7 லட்சத்துக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்போது குளத்தில் தண்ணீரும் சுத்தமாக இல்லை. இதனால் ஆயிரம் ரூபாய் வருவாயும் நின்றுவிட்டது. இதனால் படகுகளை பயன் இல்லாமல் நிறுத்தி வைத்திருந்தோம். இந்த படகு குழாமை பாதுகாப்பதற்காக பகலில் ஒருவரையும், இரவில் ஒருவரையும் பணிக்கு அமர்த்தியுள்ளோம். படகு சவாரி இல்லாத நேரத்திலும் இந்த இருவருக்கும் மாதம் ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்க வேண்டியதாக உள்ளது.
எனவே பயன் இல்லாமல் கிடக்கும் படகுகளை கோடை சீசன் உள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி சென்னை முட்டுக்காடு பகுதிகளுக்கும், கொடைக்கானலுக்கும் 10 படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அடுத்து இவை குற்றாலம் சீசனுக்கு அனுப்பி வைக்கப்படும். அனந்தன் குளத்தில் உள்ள மீதம் உள்ள 5 படகுகளும் தேவைப்படும் பட்சத்தில் வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.
அனந்தன் குளத்தில் போதிய வருவாய் இல்லாததால் இந்த படகு சவாரியை கலெக்டர் ஒப்புதலின்பேரில் தனியார் அமைப்புகள் மற்றும் சுய உதவிக்குழுவினரிடம் ஒப்படைத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கலெக்டர் ஒப்புதல் அளித்தால் இது நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.News