" “If opportunity doesn't knock, build a door.”"

குமரி அணைகளில் தண்ணீர் வெகுவாக குறைந்தது, கன்னிப்பூ சாகுபடிக்கு கோடை மழை கைகொடுக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

Views - 294     Likes - 0     Liked


  • நாகர்கோவில்,
     
    குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. கும்பப்பூ அறுவடை முடிந்ததும் பயறு, கடலை போன்றவை சாகுபடி நடைபெறுவது வழக்கம். நெல் விவசாயம் மட்டுமின்றி வாழை, தென்னை, மலர், ரப்பர் உள்ளிட்ட பல்வேறு விவசாயமும் நடைபெற்று வருகிறது.
    இவற்றுக்கு நீர் ஆதாரமாக விளங்குவது இங்குள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2, மாம்பழத்துறையாறு போன்ற அணைகளாகும். மாம்பழத்துறையாறு அணையைத் தவிர மற்ற அணைகள் பெரும்பாலான பாசன பரப்புகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.
     
    ஆண்டுதோறும் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2 ஆகிய அணைகள் ஜூன் மாதத்தில் திறக்கப்படுவது வழக்கம். இருபோக நெல் சாகுபடி நிறைவடைந்ததும் பிப்ரவரி மாத இறுதியில் அணைகள் மூடப்படும்.
     
    மாவட்டத்தில் பெய்யும் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை, கோடை மழையால் அணைகளில் எப்போதும் தண்ணீர் இருக்கும் நிலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடர்ந்தது. இதனால் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் தேதியில் அணைகள் திறக்கப்படுவதில் எந்த தடங்கலும் இல்லை.
     
    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குமரி மாவட்டத்தில் வழக்கமாக பெய்யும் மழைப்பொழிவு குறைந்து வருகிறது. இதனால் சில ஆண்டுகள் அணைகள் வறண்டு விடுகின்றன. இந்த காலக்கட்டத்தில் வழக்கம்போல் ஜூன் மாதம் முதல் தேதியில் அணைகளை திறக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
     
    இந்த ஆண்டும் அணைகளில் தண்ணீர் வெகுவாக குறைந்து விட்டது. நேற்றைய நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 1.50 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 22.65 அடியாகவும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 5.41 அடியாகவும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 5.51 அடியாகவும் உள்ளது.
     
    இந்த 4 அணைகளிலும் 1500 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தால் தான் ஜூன் மாதம் முதல் தேதியில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது விதிமுறையாக இருந்து வருகிறது. ஆனால் நேற்றையை நிலவரப்படி இந்த 4 அணைகளிலும் 300 மில்லியன் கன அடி தண்ணீர்தான் இருக்கிறது. இதனால் கன்னிப்பூ சாகுபடிக்கு இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியில் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
     
    இதுதொடர்பாக பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) அதிகாரிகளிடம் கேட்டபோது, அணைகளில் தற்போது 300 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருப்பதால் ஜூன் மாதம் முதல் தேதியில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்
     
    தண்ணீர் திறக்க இன்னும் ஒரு மாத காலம் இடைவெளி உள்ளது. எப்படியும் கோடை மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. கோடை மழை பெய்தால் அணைகளில் தண்ணீர் நிரம்பிவிடும். அவ்வாறு தண்ணீர் நிரம்பும் பட்சத்தில் ஜூன் மாதம் முதல் தேதியில் அணைகளை திறப்பதில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது.
     
    ஒருவேளை கோடை மழை பொய்த்துப் போனால், ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை கட்டாயம் பெய்யத் தொடங்கிவிடும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடிக்கான முன்னேற்பாட்டு பணிகளில் இறங்கியுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலத்தை உழுது, சமன்செய்து, நாற்றங்கால் அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
     
    இதுதொடர்பாக குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வக்கீல் வின்ஸ் ஆன்றோ கூறியதாவது:-
     
    குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்கான முன்னேற்பாட்டு பணிகளை மே மாதத்தில் விவசாயிகள் தொடங்கி விடுவார்கள். ஜூன் மாதம் முதல் வாரத்தில் அணைகள் திறக்கப்பட வேண்டும். தற்போது அணைகளில் குறைவான அளவு தண்ணீர் இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். எனவே கோடை மழை பெய்தால் அணைகளுக்கு தண்ணீர் வந்து விடும். கோடை மழை பொய்த்தாலும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கி விடும். அதனால் கன்னிப்பூ சாகுபடியை எப்படியும் மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் மாவட்டம் முழுவதிலும் 75 சதவீத விவசாயிகள் நாற்றங்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாதம் நாற்றங்கால் அமைத்தால்தான் 40 நாள் கழித்து அவற்றை பிடுங்கி நட முடியும். மேலும் பல இடங்களில் விவசாயிகள் குளத்து தண்ணீரை நம்பி கன்னிப்பூ சாகுபடியில் ஈடுபட தொடங்கி விட்டார்கள்.
     
    இவ்வாறு அவர் கூறினார்.
    News