" “If opportunity doesn't knock, build a door.”"

சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? 2–வது தகுதி சுற்றில் டெல்லியுடன் இன்று மோதல்

Views - 289     Likes - 0     Liked




  • விசாகப்பட்டினம்,

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்–டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
    ஐ.பி.எல். கிரிக்கெட்

    12–வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி விட்டது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

    சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 5–வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை சாய்த்து 2–வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. ஐதராபாத் அணி வெளியேற்றப்பட்டது.
    2–வது தகுதி சுற்று ஆட்டம்

    இந்த நிலையில் 2–வது தகுதி சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்–ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும். இறுதிப்போட்டி ஐதராபாத்தில் நாளை மறுநாள் இரவு நடக்கிறது.

    இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2–வது அணி எது? என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்ட சென்னை அணியும், இளம் வீரர்களை அதிகம் உள்ளடக்கிய டெல்லி அணியும் மல்லுக்கட்டுகின்றன.
    பேட்டிங் பலவீனம்

    3 முறை கோப்பையை வென்றுள்ள சென்னை அணி 8–வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வேட்கையில் உள்ளது. இந்த சீசனில் லீக் ஆட்டம் இரண்டிலும் சென்னை அணி, டெல்லியை வீழ்த்தியது. பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்திலும் சென்னை அணி வெற்றி கண்டு இருந்தது. ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 20 தடவை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 14 முறையும், டெல்லி அணி 6 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    இந்த சீசனில் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட சென்னை அணி கடைசி சில ஆட்டங்களில் எதிர்பார்த்தபடி ஜொலிக்கவில்லை. குறிப்பாக முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை அணி 131 ரன்களே எடுத்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் டோனியை தவிர பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. டோனி இதுவரை 405 ரன்கள் சேர்த்து நல்ல பார்மில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சுரேஷ் ரெய்னா 364 ரன்னும், பாப் டுபிளிஸ்சிஸ் 320 ரன்னும், அம்பத்தி ராயுடு 261 ரன்னும் எடுத்துள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே (ஐதராபாத்துக்கு எதிராக 96 ரன்) சிறப்பாக ஆடினார். இதுவரை 268 ரன்கள் எடுத்துள்ள ஷேன் வாட்சன் நல்ல தொடக்கம் அமைத்து கொடுக்க வேண்டியது சென்னை அணிக்கு அவசியமானதாகும்.
    வலுவான பேட்டிங்

    பந்து வீச்சில் சென்னை அணி பலமாகவே உள்ளது. இம்ரான் தாஹிர் 23 விக்கெட்டும், தீபக் சாஹர் 17 விக்கெட்டும், ஹர்பஜன்சிங் 14 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 13 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்கள். சென்னை மைதானத்தில் டோனி 3 சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவார். விசாகப்பட்டினத்தின் ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தபடி வீரர்களை அவர் முடிவு செய்வார். சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் நீக்கப்பட்டால் வேகப்பந்து வீச்சாளர் ‌ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

    டெல்லி அணியின் பேட்டிங் வலுவானதாக இருக்கிறது. ஷிகர் தவான் (503 ரன்கள்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (450 ரன்கள்), ரிஷாப் பான்ட் (450 ரன்கள்), பிரித்வி ஷா (348 ரன்கள்) நல்ல நிலையில் உள்ளனர். வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பிரித்வி ஷா, ரிஷாப் பான்ட் ஆகியோர் அதிரடியாக ஆடினார்கள். பந்து வீச்சில் ரபடா இல்லாதது இழப்பு என்றாலும் கிறிஸ் மோரிஸ் (13 விக்கெட்), இஷாந்த் ‌ஷர்மா (12 விக்கெட்), அமித் மிஸ்ரா (10 விக்கெட்), அக்‌ஷர் பட்டேல், கீமோ பால் (இருவரும் தலா 9 விக்கெட்) ஆகியோர் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    டெல்லி அணி, விசாகப்பட்டினம் ஆடுகளத்தில் ஏற்கனவே ஆடிய அனுபவம் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். முந்தைய லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்குள் முதல்முறையாக அடியெடுத்து வைக்க டெல்லி அணி தீவிரம் காட்டும். இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
    அணி வீரர்கள்

    இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

    சென்னை சூப்பர் கிங்ஸ்: பாப் டுபிளிஸ்சிஸ், ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, எம்.விஜய், அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, தீபக் சாஹர், ஹர்பஜன்சிங் அல்லது ‌ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷாப் பான்ட், காலின் முன்ரோ, அக்‌ஷர் பட்டேல், ரூதர்போர்டு, கீமோ பால், அமித் மிஸ்ரா, டிரென்ட் பவுல்ட், இஷாந்த் ‌ஷர்மா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    News