தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறக்க அனுமதி: வணிகர் சங்கங்கள் வரவேற்பு-மகிழ்ச்சி
Views - 313 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை திறந்து வைக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு வணிகர்கள் வரவேற்றுள்ளனர். இதுதொடர்பாக நாகர்கோவில் மாநகரில் வணிக நிறுவனங்கள் நடத்துபவர்கள், கடைக்காரர்கள், வணிகர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ள கருத்துகள் விவரம் வருமாறு:-தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறுகையில், வணிகர்களுக்கு முன்பு ‘லைலென்சு’ வழங்கியபோது இரவு 1.30 மணி வரை கடைகள் திறந்திருக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டது. ஆனால் இரவு கடை திறந்திருந்தால் வியாபாரிகளை அவதூறாக திட்டுதல், வழக்கு போடுதல் என்று போலீசார் அத்துமீறல் இருந்தது. ஆனால் தற்போது திடீரென்று 24 மணி நேரமும் கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. ‘ஆன்-லைன்’ வணிகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளன. எனவே வெளிநாட்டு வணிகத்தை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கருதுகிறது. ஏற்கனவே உள்நாட்டு வணிகம் அழிந்து வருகிறது. எனவே இந்த உத்தரவால் சாமானிய வணிகர்கள் பெரிதும் பயன்பெற போவது இல்லை.
பணக்கார நாடுகளில் இருந்து மத்திய அரசுக்கு உத்தரவுகள் வருகிறது. மத்திய அரசு அதனை தமிழக அரசு மீது திணிக்கிறது. எனவே மத்திய-மாநில அரசுகள் சுய சிந்தனையுடன் இந்த முடிவை எடுக்கவில்லை என்று நான் குற்றம் சாட்டுகிறேன் என்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், 24 மணி நேரமும் கடைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று எங்கள் அமைப்பு கடந்த 6 ஆண்டுகளாக மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி வந்தது. தற்போது தமிழக அரசு இதற்கு அனுமதி வழங்கி இருப்பதை வரவேற்கிறோம். இந்த அரசாணையால் வெகுகாலமாக பாதிக்கப்பட்டு வந்த இரவு நேர டீக்கடைகள், உணவகங்கள் மற்றும் நெடுஞ்சாலை கடைகள் நடத்தும் வணிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 24 மணி நேரமும் இயங்கும் கடைகளில் குறைந்தபட்சம் 10 பேர் பணியாற்ற வேண்டும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. சாதாரண டீக்கடையில் 10 பேருக்கு குறைவாகவே பணியாற்றுவர். இதனால் சாதாரண டீக்கடை நடத்துபவர்கள் 24 மணி நேரமும் கடையை திறந்து வைக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, சாமானிய வணிகர்களும் பயன்பெறும் வகையில் இந்த அரசாணையில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அதேபோன்று காவல்துறையினரின் அத்துமீறல் இல்லாத வகையில் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் மெடிக்கல் கடை நடத்தி வரும் பீர் முகமது (வயது60) கூறுகையில், தமிழக அரசு அறிவித்துள்ள இந்த திட்டம் வரவேற்கத்தக்கது. இரவு நேரங்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறப்பது மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். அதே சமயத்தில் மது குடிப்பவர்கள் மற்றும் திருடர்களால் அச்சம் ஏற்படும். இதற்கு தகுந்த பாதுகாப்புடன் அரசு சில நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வரும் கோலப்பன் (37) என்பவர் கூறுகையில், இந்த திட்டம் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நல்ல வரவேற்பு இருக்கும். அதாவது, தியேட்டர்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையம் பகுதிகளில் கடைகள் வைத்திருப்பவர்களுக்கு நல்ல லாபம் தரும். மற்றவர்களுக்கு லாபம் கிடைக்குமா? என்பதில் சந்தேகம் தான். பெரிய வணிக நிறுவனங்களுக்கு இது நல்ல லாபத்தை தரும் திட்டமாகும்.
சிறிய கடைகள் நடத்துபவர்களுக்கு இரவில் கடை திறப்பதால் எந்த பயனும் இருப்பதில்லை. மேலும் இரவில் கடைகள் நடத்தும் போது வேலை செய்பவர்களுக்கு கூடுதல் சம்பளம் அளிக்க வேண்டும். மின் கட்டணம் மற்றும் கடை வாடகை கூடும் என தெரிவித்தார்.
நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் உதயகுமார் (37) என்பவர் கூறுகையில், இதில் சிறிய கடைகளை விட பெரிய கடைகள் வைத்திருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெண்கள் பணிபுரியும் கடைகளுக்கு பாதுகாப்பு மிக முக்கியம். இதில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். திட்டத்தின் மூலம் தொழில் வளர்ச்சி கூடுவதால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். இரவில் கடைகள் திறப்பதால் தேவையான பொருட்களுக்கு திண்டாட்டம் இருக்காது என்று தெரிவித்தார்.News