நாகர்கோவில் அருகே தும்பு ஆலையில் தீ விபத்து
Views - 289 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி தெற்கு பள்ளியை சேர்ந்தவர் கலைமாறன். இவருக்கு சொந்தமான தும்பு ஆலை ஒன்று இலந்தையடிதட்டு பகுதியில் உள்ளது. இதில் சுமார் 20–க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறார்கள். இந்த ஆலையில் தென்னை நாரில் இருந்து கயிறுகள் தயாரிக்கப்பட்டு வெளியூர் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.இந்த நிலையில், தும்பு ஆலையில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. அந்த தீ அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த கயிறுகள் மற்றும் தென்னை நார்களில் பற்றியது. சிறிது நேரத்தில் தீ ஆலை முழுவதும் பரவி எரியத்தொடங்கியது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள், தீ விபத்து குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நிலைய அதிகாரி துரை தலைமையில் 2 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
தீயை அணைத்த பிறகும் தொடர்ந்து புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீ விபத்தில் ஆலையின் கட்டிடம் சேதமடைந்தது. மேலும் அங்கு இருந்த 12 தென்னை மரங்களும் எரிந்து நாசமானது. இதுதவிர ஆலையில் இருந்த எந்திரங்களும் சேதம் அடைந்தன. இந்த தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. அவற்றின் மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. மின்கசிவு காரணமாக ஆலையில் தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.News